என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடி காங்கேயநல்லூரில் கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொது மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
கழிவு நீரேற்று நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
- துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
- போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்
வேலூர்:
காட்பாடி அடுத்த காங்கேய நல்லூர் களத்து மேட்டு பகுதியில் பாதாள சாக்கடை நீரேற்று நிலையம் கட்டப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நீரேற்று நிலைய பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று மீண்டும் கழிவு நீரேற்று நிலைய பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று காலை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நீரேற்று நிலையம் முன்பாக குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
இந்த பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பாதாள சாக்கடையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே இப்பகுதியில் கழிவு நீரேற்ற நிலையம் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.
போலீசார் போராட்டம் செய்ய வந்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.






