search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை பணிகளை ஜனவரிக்குள் முடிக்க உத்தரவு
    X

    வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் சுஜாதா கமிஷனர் அசோக்குமார் தலைமை யில் நடந்த காட்சி.

    பாதாள சாக்கடை பணிகளை ஜனவரிக்குள் முடிக்க உத்தரவு

    • இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது
    • மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் சுஜாதா கமிஷனர் அசோக்குமார் தலைமை யில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி பொறியாளர்கள், ஒப்பந்த தாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''வேலூர் மாநகராட்சியில் முதல் கட்டத்தில் 10 வார்டுகளில் தொடங்கப்பட்ட பணிக்காக முத்துமண்டபம் பகுதியில் 10 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 10 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு கொடுத்ததும் இந்த மையம் முறையாக செயல்பட தொடங்கும்.

    இரண்டாம் கட்ட பணி 3 பகுதிகளாக நடைபெற்று வருகிறது. சர்கார்தோப்பு பகுதியில் 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்ட முதல் பகுதியில் மொத்தமுள்ள 105 கி.மீ தொலைவு பணியில் 92 கி.மீ வரை முடிந்துள்ளது. இதில், 3-ல் 2 கழிவு நீரேற்று நிலைய பணிகள் முடிந்துள்ளன. இரண்டாம் பகுதியில் 87 கி.மீ தொலைவு பணிகளில் 70 கி.மீ அளவுக்கு முடிந்துள்ளது. 6 கழிவு நீருந்து நிலையங்களில் 3 பணிகள் முடிந்துள்ளன. பகுதி 3 திட்டத்தில் 242 கி.மீ தொலைவு பணிகளில் இதுவரை 196 கி.மீ முடிந்துள்ளது. இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறும்போது, ''வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை டிசம்பர் 31-ந் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    முடிக்கப்பட்ட பணிகளை 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் எங்களிடம் ஒப்படைக்க இறுதிக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற வேண்டிய பணிகளுக்காக பகுதி, பகுதியாக அனுமதி பெற்று இறுதிக் கட்ட பணிகளை முடிக்கவுள்ளோம். அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

    இந்த பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி பொறியாளர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். அதிக ஆட்களை வைத்து பணிகளை முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்'' என்றார்.

    Next Story
    ×