search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 16-ந் தேதி வேலூர் வருகை
    X

    முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 16-ந் தேதி வேலூர் வருகை

    • பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடக்கிறது
    • முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    வேலூர்:

    தி.மு.க.வின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா, வேலூர் அடுத்த கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

    இதில், தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

    இதில் வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் முதல் - அமைச்சர் பங்கேற்று, வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.

    கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல் - அமைச்சர் வேலூருக்கு வருகிற 16-ந் தேதியே வந்துவிடுகிறார்.

    அதன்படி, சென்னையில் இருந்து 16-ந் தேதி மாலை ரெயிலில் புறப்பட்டு, அன்று இரவு 7.30 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு முதல் அமைச்சர் வருகிறார். அவருக்கு தி.மு.க. கட்சியினர் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    தொடர்ந்து, அன்று இரவு, விருந்தினர் மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் முதல் அமைச்சர் தங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகிறது.

    மறுநாள் 17-ந் தேதி காலை 10.15 மணிக்கு, மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாமுக்கு செல்கிறார். அங்கு நிகழ்ச்சிக்கான மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. சிறிய அளவிலான பிளாட்பாரம் மட்டும் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து மேல்மொணவூர் முகாம் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற இடங்களிலும் கட்டப்பட்டுள்ள வீடுகளை காணொளி மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    பின்னர், மேல்மொணவூர் முகாமில் உள்ள ஒரு சில வீடுகளை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு சாவியை ஒப்படைக்கிறார். தொடர்ந்து, தி.மு.க. முப்பெரும் விழா நடக்கும் கந்தனேரிக்கு செல்கிறார்.

    அங்கு தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று, கொடியேற்றி வைத்த பின்னர் மீண்டும் வேலூர் வந்து ஓய்வெடுக்கிறார்.

    அன்று மாலை விழா மேடைக்கு செல்லும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வேலூர் வரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு பணியிலும் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

    இதனால், வேலூர் மாவட்ட அதிகாரிகள் மட்டுமின்றி, தி.மு.க.வினரும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    Next Story
    ×