search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இரு தரப்பினர் மோதலால் கோவில் திருவிழா பாதியில் நிறுத்தம்
    X

    திருவிழாவில் பூங்கரகம் ஊர்வலம் நடந்த காட்சி.

    இரு தரப்பினர் மோதலால் கோவில் திருவிழா பாதியில் நிறுத்தம்

    • போலீஸ் குவிப்பு-பதட்டம்
    • முதல் மரியாதை யார் செய்வது என்பதில் தகராறு

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை, முன்னாள் ஊர் நாட்டாமை மற்றும் அவரது மகன் ஆகியோர் நிர்வகித்து வந்தனர். அவர்கள் கணக்கு வழக்குகளை ஊர் பொது மக்களுக்கு முறையாக வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    புதிய நாட்டாமைகளை தேர்வு செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் இது குறித்து குடியாத்தம் சப்- கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

    அப்போது இரு தரப்பினரையும் நேரில் அழைத்து குடியாத்தம் சப்-கலெக்டர் வெங்கடராமன் விசாரணை நடத்தினர்.

    பின்னர் குடியாத்தம் சப் -கலெக்டர் உத்தரவின்படி புதிய நாட்டாண்மையை கிராமமக்கள் தேர்வு செய்தனர்.

    இந்த நிலையில் பாலூர் கிராமத்தில் வைகாசி மாதம் நடத்த வேண்டிய கெங்கை யம்மன் கோவில் திருவிழா 3 மாதங்கள் கழித்து நேற்று புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஊர் நாட்டாண்மை தலைமையில் வெகு விமர்சையாக நடந்தது.

    தொடர்ந்து இரவு 11 மணி அளவில் அம்மன் சிரசு ஊர்வலம் மற்றும் பூங்கரக ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தின்போது உருமி மேளம், பம்பை மற்றும் பேண்ட் வாத்தியங்கள், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    திருவிழாவின் போது முன்னாள் நாட்டாண்மை மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாட்டாண்மை ஆகிய 2 தரப்பினரும் சீர்வரிசைகளுடன் கோவில் அருகே வந்தனர். அப்போது சாமிக்கு முதல் பூஜைகள் மற்றும் முதல் மரியாதை யார் செய்வது என்பது குறித்து இரு தரப்பி னருக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடந்தது. அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டால் சமரசம் ஏற்படவில்லை. இதனால் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.

    ஆகம விதிப்படி நடைபெற இருந்த கெங்கை யம்மன் திருக்கல்யாணம் திருவிழா பாதியில் நின்று போனது. சீர்வரிசையுடன் ஆர்வமாக வந்த பொது மக்களும் சாமி தரிசனம் செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்கு இடையே அமைந்துள்ளதால் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 2 மாவட்ட போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பதட்டம் நிலவியது.

    Next Story
    ×