என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடிகர் சந்தானம் ரசிகர்கள் 3 பேர் மீது வழக்கு
- அரசுப்பள்ளி பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டியதால் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அலமேலுமங்காபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பள்ளியின் பெயர் பலகை மீது திரைப்பட நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் நேற்று முன்தினம் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் பள்ளியின் பெயர் முழுமையாக தெரியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பள்ளியின் அருகே திரண்டனர். பள்ளியின் பெயர் பலகை மீது போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பள்ளியின் பெயர் பலகை மீது போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறினார்கள்.
இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் விசாரணை நடத்தினார். அதில், பள்ளியின் பெயர் பலகை மீது போஸ்டர்கள் ஒட்டியது நடிகர் சந்தானம் ரசிகர் மன்றத்தை சேர்ந்த வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த வசந்த், அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த லோகேஷ், ராகுல் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் அனுமதி இன்றி போஸ்டர்கள் ஒட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






