என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதி இல்லாத ஆட்டோக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
- எஸ்.பி.மணிவண்ணன் உத்தரவு
- மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோட்டீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் என்.எஸ்.எஸ். அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.
அதன்படி, வேலூரில்' உள்ள தனியார் கல்லூரிகளின் என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவர்களை போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் அவர்களுக்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படும் நேரங்களை ஆய்வு செய்து அந்த நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசும்போது, 'ஆட்டோவில் பயணித்த ஒரு மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கி நாட்டை உலுக்கிய சம்பவம் வேலூரில் நடைபெற்றுள்ளது.
எனவே, வேலூரில் முறையான அனுமதி இல்லாத ஆட்டோக்களை கட்டுப்படுத்தும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடன் போலீஸ் துறையினரும் இணைந்து சோதனை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் முறைகேடாக ஆட்டோக்கள் இயக்கப்படுவது தவிர்க்கப்படும். அதேபோல், ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு உட்கோட்டத்திலும் எத்தனை ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன.
அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.






