search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தேர்வு எப்போது? காங்கிரஸ் தலைமை மவுனம்
    X

    திருச்சி மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தேர்வு எப்போது? காங்கிரஸ் தலைமை மவுனம்

    • திருச்சி மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தேர்வு தாமதமாகும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை மவுனம் காத்து வருகிறது
    • தற்போதைய நிலையில் கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும், காங்கிரசாருக்கும் எஞ்சி இருக்கும் ஒரே பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவிதான்

    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அபார வெற்றியை பெற்றன. அதைத் தொடர்ந்து அனைத்து மாநகராட்சிகளையும், பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் தி.மு.க. தன்வசமாக்கிக் கொண்டது.

    ஒரு சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் துணை மேயர் பதவியை எதிர்பார்த்தனர். ஆனால் அது கானல் நீராய் போனது. அதன் பின்னர் கோட்டத் தலைவர் பதவிகளுக்கும் முட்டி மோதிப் பார்த்தனர். எதுவும் நடக்கவில்லை.

    தற்போதைய நிலையில் கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும், காங்கிரசாருக்கும் எஞ்சி இருக்கும் ஒரே பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவிதான்.

    அதற்கும் இலவு காத்த கிளியாக அக்கட்சியினர் காத்திருக்கின்றனர். தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கழிந்த பின்னரும் தற்போது வரை எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.

    தமிழக காங்கிரஸ் தலைமையில் இருந்து உறுப்பினர்கள் குழு தலைவரை அறிவிக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்புக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் எதிர்க்கட்சி தலைவர் தேர்வும் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக கூறப்பட்டது.

    தேர்தல் நேரத்தில் 10 சீட்டுகள் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர். கடைசியில் 5 சீட்டுகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன. போட்டி பலமாக இருந்ததால் கொடுக்கப்பட்ட 5 சீட்டுகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சித் தலைமை திண்டாடி போனது.

    அதன் பின்னர் வழக்கம் போல் கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்களும் கொடுத்த 5 இடங்களிலும் வெற்றிக் கொடியை நாட்டினர். இவர்களில் சிலர் தற்போது தமக்குத் தெரிந்த வழிகளில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

    இதிலும் அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கட்சித் தலைமை குழு தலைவரை அறிவிக்குமா? அல்லது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் முடிந்த பின்னர் அறிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதற்கிடையே திருச்சி மாநகராட்சியில் கட்சிகளின் அடிப்படையில் கவுன்சிலர்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவர் தேர்வுடன் அதற்கும் விடை கிடைக்கும் என்று நம்பிக்கையில் இதர கட்சி கவுன்சிலர்கள் காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×