என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றில் குதித்து தற்கொலை செய்த பெண்ணின் உடல் கிடைக்காததன் மர்மம்?
- அங்கம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெட்ட வாய்த்தலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் வந்தார்.
- சிறுவன் தாயின் கையை உதறிவிட்டு ஆற்றில் இருந்து கரையேறி விட்டதாகவும், அங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
திருச்சி,
திண்டுக்கல் குஜிலியம்பாறை இலந்தை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 33). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெட்ட வாய்த்தலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் வந்தார்.
பின்னர் முக்கொம்பு அணைப்பகுதியில் காவிரி ஆற்றில் மகனுடன் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது அச்சிறுவன் தாயின் கையை உதறிவிட்டு கரையேறி விட்டதாகவும், அங்கம்மாள் அங்கேயே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு படை வீரர்கள்,ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்கள் சம்பவத்தன்று சென்று படகில் அங்கம்மாளை தேடினர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இன்று 5-வது நாளாக திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்துள்ளனர்.
இது தொடர்பாக தீயணைப்பு படை வீரர்கள் கூறும் போது, தற்கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணின் உடலை அவரது மகன் கொடுத்த தகவலின் அடிப்ப டையில் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பொதுவாக ஒருவர் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்தால் அந்த பிணம் 24 மணி நேரத்தில் மிதந்து விடும். ஆனால் 5 நாட்கள் ஆகியும் எந்த தகவலையும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆகவே அவரது உடலை மணல் மூடி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு முசிறியில் ஆற்றில் தவறி விழுந்த மூன்று பேரின் உடல்களை மாதக்கணக்கில் தேடியும் கண்டறிய முடியவில்லை. பின்னர் 3 வருடம் கழித்து மணல் அள்ளியபோது மூன்று பேரின் மண்டை ஓடுகள் கிடைக்கப் பட்டன. எனவே அதிகாரிகள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றனர்.






