search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் இடித்து அகற்றம்
    X

    சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் இடித்து அகற்றம்

    • சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் இடித்து அகற்றப்பட்டது
    • சாலை அகலமானதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

    திருச்சி:

    திருச்சி பீம நகர் ஹீபர் ரோடு, பாரதிதாசன் சாலை, பறவைகள் சாலை, மத்திய பஸ்லையும் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன.

    இடித்து அகற்றம்

    இது தொடர்பாக கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோருக்கும் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று காலை அதிரடியாக மேற்கண்ட பீமநகர், பாரதிதாசன் ரோடு, வில்லியம்ஸ் ரோடு, பறவைகள் சாலை, மத்திய பஸ் நிலைய சுற்றுப்புற பகுதிகளில் உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை உதவி பொறியாளர்கள் வேல்முருகன், பா. வா. பக்ருதீன், சுகாதார அலுவலர் தலை விரிச்சான் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் காலை ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

    வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

    பீமா நகர் ஹீபர் ரோடு பகுதியில் சாலையின் இரு பக்கங்களிலும் 5 அடி முதல் 10 அடி வரை சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டது அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான இடங்களில் மேற்கூரைகள் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் கட்டுமானங்களும் இருந்தன. இவை அனைத்தும் இடித்து தள்ளப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதால் சாலையின் அகலம் கூடியுள்ளதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேற்கண்ட பகுதிகளில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திடீர் ஆக்கிரமிப்பு அகற்றம் மேற்கண்ட பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தியது. கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் அகிலா தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் திடீரென சாலையாகிரமிப்புகள் அகற்றப்பட்டது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேலும் சாலைகளை ஆக்கிரமித்தால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×