என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையை சீரமைக்ககோரி உப்பிலியபுரத்தில் மறியல் - பா.ஜ.க.வினர் 70 பேர் கைது
    X

    சாலையை சீரமைக்ககோரி உப்பிலியபுரத்தில் மறியல் - பா.ஜ.க.வினர் 70 பேர் கைது

    • வெள்ளரிக்காடு சேத்தகம், மாயம்பாடி, கொடுங்கல், நெய்வாசல், புணவரை ஆகிய கிராமங்களின் வாழ்வாதாரமாக சோபனபுரத்திலிருந்து டாப்செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் வனத்துறை சாலை உள்ளது.
    • இச்சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலைக்கு செல்லும் சோபனபுரம் முதல் டாப்செங்காட்டுபட்டிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. வனத்துறையினருக்கு சொந்தமான 14 கி.மீ. சாலை, கடந்த 20 வருடங்களாக புதுப்பிக்கப்படாமல், மராமத்து பணிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.

    தற்போது பெய்து வரும் தொடர் கனமழையாலும், மழைநீர் வடிகால் குழாய்களில் ஏற்பட்ட முழு அடைப்புகளாலும் சாலையில் மண் அரிப்பு, பள்ளங்கள் ஏற்பட்டு சாலை, வாகன போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சாலையை புதுப்பிக்க கோரி மலைவாழ் மக்கள், தன்னார்வலர்கள், சாலைப்பயனீட்டாளர்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர்.

    பச்சைமலையிலுள்ள திருச்சி மாவட்டம் தென்புறநாடு ஊராட்சியை சேர்ந்த தண்ணீர்பள்ளம், சேம்பூர், கம்பூர், கீழ்க்கரை, பூதக்கால், கருவங்காடு, நச்சிலிப்பட்டி, சோளமாத்தி, பெரும்பரப்பு, பெரிய சித்தூர், டாப்செங்காட்டுப்பட்டி, குண்டக்காடி, லட்சுமணபுரம், புத்தூர், மற்றும் சேலம் மாவட்டம் ஆத்திநாடு ஊராட்சியை சேர்ந்த வெங்கமுடி, சின்ன பக்களம், பெரிய பக்களம், ஓடக்காடு, ஓடக்காடுபுதூர், சின்ன மங்கலம், பெரிய மங்கலம்,

    நல்லமாத்தி, சின்ன நாகூர் பெரிய நாகூர், மலங்காடு, மேல்வஞ்சாரை, கால்வஞ்சாரை, நடுவஞ்சாரை, வெள்ளரிக்காடு சேத்தகம், மாயம்பாடி, கொடுங்கல், நெய்வாசல், புணவரை ஆகிய கிராமங்களின் வாழ்வாதாரமாக சோபனபுரத்திலிருந்து டாப்செங்காட்டுப்பட்டிக்கு செல்லும் வனத்துறை சாலை உள்ளது. வணிகம், சுகாதாரம், வருவாய், மின்சாரம், கல்வி, உள்ளடக்கிய அத்யாவசியமான போக்குவரத்து இச்சாலை வழியாக மட்டுமே நடைபெறுகிறது. இச்சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

    பா.ஜ.க. சாலை மறியல்

    சாலையை புதுப்பிக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் அறிவித்ததையடுத்து, துறையூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தையில் கட்சி பிரமுகர்கள் புறக்கணித்து சாலை மறியலை அறிவித்தனர். அதன் பேரில் நேற்று காலை உப்பிலியபுரம் அண்ணா சிலையருகே பா.ஜ.க. மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில அரசையும் வனத்துறையினரையும் வெகுவாக சாடி, கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஷ்மின் தலைமையில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 40 போலீசார் பாதுகாப்பு பணியினில ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முன்அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்டதால் 61 ஆண்கள் 9 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் உப்பிலியபுரம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×