search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோடியும், மு.க.ஸ்டாலினும் மக்களை ஏமாற்றுகிறார்கள் - ேத.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் அழகாபுரம் மோகன்ராஜ் பேச்சு
    X

    மோடியும், மு.க.ஸ்டாலினும் மக்களை ஏமாற்றுகிறார்கள் - ேத.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் அழகாபுரம் மோகன்ராஜ் பேச்சு

    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்து பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்திய போது அதனை எதிர்த்து விஜயகாந்த் குரல் கொடுத்தார்.
    • பெண்களுக்கு ரூ.1000 தருவதாக சொல்லிவிட்டு தரவில்லை. அவர்களால் முடிந்த சில திட்டங்களை நிறைவேற்றிவிட்டு 60 சதவீதம், 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக சொல்கிறார்கள்.

    திருச்சி :

    திருச்சி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில தொழிற்சங்க அமைப்பு சாரா செயலாளர் திருப்பதி வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் டிவி. கணேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார், தெற்கு மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி என். பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் ஜாஹிர் உசேன், பொறியாளர் அணி துணைச் செயலாளர் ஆனந்தராஜ், நெசவாளர் அணி துணைச் செயலாளர் பூபேஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதில் அழகாபுரம் மோகன்ராஜ் பேசுகையில், 2011-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்து பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்திய போது அதனை எதிர்த்து விஜயகாந்த் குரல் கொடுத்தார். மின் கட்டணத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் அதி.மு.க.வுக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தைரியம் இல்லை. எதுவும் இல்லாதவன் தான் கஞ்சி காய்ச்சி குடிப்பான். அரிசிக்கும் இப்போது ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. எட்டு கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு தருவதாக சொல்லி கேஸ் விலையை மூன்று மடங்கு ஏற்றி விட்டார்கள்.

    பெட்ரோல் விலையை குறைத்த தமிழக அரசு, டீசல் விலையை குறைக்க மறுக்கிறது. பெண்களுக்கு ரூ.1000 தருவதாக சொல்லிவிட்டு தரவில்லை. அவர்களால் முடிந்த சில திட்டங்களை நிறைவேற்றிவிட்டு 60 சதவீதம், 70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக சொல்கிறார்கள். நரேந்திர மோடியும், மு.க.ஸ்டாலினும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காசு வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் நிலை மாறினால் தான் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றார்.

    Next Story
    ×