என் மலர்
உள்ளூர் செய்திகள்

படியில் பயணம் செய்த மெக்கானிக் பலி
- துறையூரில் படியில் பயணம் செய்த மெக்கானிக் பலி
- படியில் தொங்கிக்கொண்டு செல்போன் பேசியதால் விபரீதம்
துறையூர்,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு uட்பட்ட ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 43). இவர் மெக்கானிக்காக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி என்கிற மனைவியும், கோகுல், வசந்தகுமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக துறையூர் வந்துவிட்டு, மீண்டும் தன்னுடைய கிராமத்திற்கு புளியஞ்சோலை செல்லும் அரசு பஸ் ஒன்றில் சென்றுள்ளார். அப்பொழுது வடிவேல் படியில் தொங்கிக்கொண்டு செல்போன் பேசியதாகவும், அப்பொழுது தவறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவரும், பயணிகளும் சென்று பார்த்த பொழுது வடிவேல் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதை அறிந்த துறையூர் போலீசார், வடிவேலின் பிரேதத்தை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






