search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாவட்டத்தில் காச நோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
    X

    திருச்சி மாவட்டத்தில் காச நோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    • கொரோனா தொற்றுக்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் காசநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
    • காச நோய் அறிகுறிகள் இருந்தவர்களும் பரிசோதனைக்கு அச்சப்பட்டு சிகிச்சையை தள்ளிப் போட்டதால் நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது

    திருச்சி:

    கொரோனா வைரசின் தாக்கத்தால் திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் காசநோய் இறப்பு விகிதம் அதிகரித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019-ல் 7 சதவீதமாக இருந்த காசநோய் இறப்பு விகிதம் 2021-ல் எட்டாகவும், 2022-ல் 9 ஆகவும் உயர்ந்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் 2019-ல் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,474 ஆக இருந்தது. இதில் சிகிச்சை பலனளிக்காமல் 255 பேர் இறந்தனர். 2020-ல் பாதிப்பு 2,158 ஆக இருந்தது. இதில் 193 இறந்தனர். 2021-ல் 2046 பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் 224 பேர் மடிந்தனர்.

    இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளில் 8,098 பேர் காசநோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 328 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இறப்பு விகிதம் அதிகரித்ததற்கு கொரோனா வைரஸ் தாக்கமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கோவிட் மற்றும் காச நோய் அறிகுறிகள் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும்.

    இதனால் கோவிட் பயத்தினால் காச நோய் அறிகுறிகள் இருந்தவர்களும் பரிசோதனைக்கு அச்சப்பட்டு சிகிச்சையை தள்ளிப் போட்டதால் நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து திருச்சி மாவட்ட காச நோய் அலுவலர் டாக்டர் எஸ் சாவித்திரி கூறும் போது, காசநோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடனே பரிசோதனை செய்து அதற்கான மருந்துகளை உட்கொண்டால் நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

    இறப்பு அதிகரித்ததற்கு கோவில் சூழ்நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    முதல் இரண்டு காலாண்டுகளில் இந்த ஆண்டு 103 காச நோயாளிகள் மட்டுமே இறந்துள்ளனர். காச நோய்க்கு தேவையான நல்ல மருந்து நம்மிடம் இருக்கிறது. தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தங்கள் கண்டறியும் ஒவ்வொரு காச நோயாளிகள் குறித்தும் உடனடியாக மாவட்ட காசநோய் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு காச நோய் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு முதல் மாதத்தில் ரூ.1000 மும், அடுத்தடுத்த 5 மாதங்களுக்கு ரூ.500-ம் வழங்கி வருகிறது எனக் கூறினார்.

    Next Story
    ×