search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இயற்கை சீற்றத்தால் மாநகராட்சி சாலை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
    X

    இயற்கை சீற்றத்தால் மாநகராட்சி சாலை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

    • அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிட பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 47 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், ஒரு கன்று என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், 5 பயனாளிகளுக்கு தலா இரண்டு காளை மாடுகளும் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு வழங்கினர்.
    • குடிநீர் கலங்கலாக வருவதை தடுப்பதற்காக கம்பரசம்பேட்டை நீரேற்று நிலையப் பகுதியில் ரூ.5 கோடியில் நவீன எந்திரம் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சமலையில் வசித்து வரும் பழங்குடியின சுய உதவிக்குழு பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச கரவை மாடுகள் 70 பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு காணிக்கையாக பெறப்பட்ட கால்நடைகள், ஆலய கோசாலை மற்றும் கம்பரசம்பேட்டை கோசாலைகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிலிருந்த 122 பசு மாடு மற்றும் கன்றுகளை மேற்கண்ட பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு கம்பரசம்பேட்டை கோசாலையில் இன்று நடந்தது.

    இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிட பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 47 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், ஒரு கன்று என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், 5 பயனாளிகளுக்கு தலா இரண்டு காளை மாடுகளும் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு வழங்கினர்.

    இதன் மூலம் பச்சமலையில் உள்ள தென்புறநாடு, வடநாடு, கோம்பை ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் பயனடைந்தனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குடிநீர் கலங்கலாக வருவதை தடுப்பதற்காக கம்பரசம்பேட்டை நீரேற்று நிலையப் பகுதியில் ரூ.5 கோடியில் நவீன எந்திரம் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இது போன்ற எந்திரம் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலை பணிகளை தொடங்கிய நிலையில் மழை வந்துவிட்டது. போக்குவரத்தும் இடையூறாக இருக்கிறது. இதனால் பகலில் சாலைகள் போட இயலவில்லை. இரவில் மட்டுமே சாலைகள் போடும் பணி நடக்கிறது. மழையில் சாலை போட்டால் தார் வீணாகிவிடும். இயற்கையின் சீற்றத்தால் மட்டுமே சாலை பணிகள் தாமதம் ஆகி உள்ளது. ஆனால் நடைபெற உள்ள பணிக்கான ஆணைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போக்குவரத்து மற்றும் மின்சாரம் சப்ளையில் அரசு வருமானம் பார்க்க கூடாது. லாபம் ஈட்டக் கூடாது என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, சரி ரைட் என மட்டும் பதில் அளித்தார்.

    அதி.மு.க. ஆட்சியிலும் பஸ் கட்டணம் மற்றும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை மனதில் வைத்து சரி ரைட் என மட்டும் சிரித்தவாறு பதில் அளித்து சென்றதாக அங்கிருந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×