search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்ட  முதற்கட்ட பணிகள் தீவிரம்
    X

    காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்ட முதற்கட்ட பணிகள் தீவிரம்

    • கரூர், திருச்சி, புதுக்கோட்டை மக்களின் கனவு திட்டமான காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்ட முதற்கட்ட பணிகள் தீவிரமாக தொடங்கி உள்ளது
    • இதுவரை 237.97 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது

    திருச்சி,

    தமிழகத்தின் கனவு திட்டங்களில் ஒன்றாக காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளது. காவிரியில் இருந்து வைகை மற்றும் குண்டாறு வரை கால்வாய் அமைத்து, காவிரியில் கிடைக்கும் உபரி நீரை மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை உள்ள தென் பகுதிகளுக்கு திருப்பி விடுவதே திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

    காவிரியின் உபரி நீரை தெற்கு வெள்ளாறு, வைகை மற்றும் இறுதியாக குண்டாறு வரை கொண்டு செல்வதற்காக, 262 கி.மீ. நீளமுள்ள புதிய இணைப்புக் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இது காவிரியில் மாயனூர் தடுப்பணையில் இருந்து தொடங்குகிறது.

    இதன் மூலம் சுமார் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, மாயனூர் தடுப்பணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை சுமார் 118.45 கி.மீ., தொலைவுக்கு ரூ.6,941 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த கால்வாய் கரூர் மாவட்டத்தில் 47.23 கி.மீ. தூரத்திலும், திருச்சி மாவட்டத்தில் 18.89 கி.மீ தொலைவிலும் மற்றும் புதுக்கோட்டை 52.32 கி.மீ. தூரத்துக்கும் பயணிக்கிறது. தற்போது முதல் கட்ட பணிகளில் ஒன்றாக மாயனூர் தடுப்பணையில் இருந்து 4.10 கி.மீ. தூரத்துக்கும், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 5.35 கி.மீ., நீளத்துக்கும் 2 வழித்தடங்களில் கால்வாய் அமைக்க ரூ.331 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது.

    இதில் இதுவரை 78 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி 3 மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு கரூர் மாவட்டத்தில் 427.81 ஹெக்டேர் , திருச்சி மாவட்டத்தில் 200.41 ஹெக்டேர் பட்டா நிலமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 585.05 ஹெக்டேர் பட்டா மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களும் தேவைப்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். ரம்யா தேவி உடன் இருந்தார்.

    பின்னர் நிறுவன ஆதாரத்துறை செயற்பொறியாளர் எஸ். சிவகுமார் கூறும்போது, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் அமைக்கும் பணி ஆகிய இரண்டும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை, 237.97 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மீதமுள்ள பகுதிக்கு ஏற்ப, செயல்முறை நடந்து வருகிறது.

    நிலம் கையகப்படுத்துதல் எந்த தடங்கலும் இன்றி முன்னேறும் வகையில், குறிப்பாக நிதி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. இந்த நிதியாண்டிற்குள் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இரு வழித்தடங்களில் கால்வாய் அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த கால்வாயின் முதல் கட்டத்தின் மூலம் கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 42,170 ஏக்கர் பாசன வசதியும், 342 பாசன குளங்கள் பாசன வசதியும் பெறும். 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றையும் வைகையையும் இணைக்கும், சுமார் 110 கி.மீ தூரமும், 3-வது இறுதிக் கட்டம் வைகையை குண்டாற்றுடன் (34.04 கி.மீ) இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    Next Story
    ×