என் மலர்
உள்ளூர் செய்திகள்

துணை தாசில்தார் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் அதிரடி கைது
- 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் தாக்கினர்
- 5 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்
கே.கே.நகர்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் ஏ.சி.எல். என்ற சாப்ட்வேர் நிறுவனத்தை பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு கனரா வங்கியில் ரூ.22 கோடி கடன் வாங்கிவிட்டு 2019-ம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகினர்.
இதனையடுத்து வங்கியில் பெற்ற கடனுக்காக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின்படி காஜாமலை பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ரூ.44 லட்சம் மதிப்புள்ள வீட்டை மண்டல துணைதாசில்தார் பிரேம்குமார், கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றனர். அப்போது, அடையாளம் தெரியாத 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் தாக்கினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த துணை தாசில்தார் பிரேம்குமார், வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்த அசேன் (வயது 42), சையது ஜாகிர் உசேன் (29), ஷேக் மொய்தீன் (40), திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(30), மாடசாமி(24)ஆகிய 5 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
கைதான 5 பேரையும் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.






