search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வரவேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு
    X

    ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வரவேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு

    • போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வருகிற 9-ந்தேதி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
    • பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து சீரான பேருந்து இயக்கம் நடைபெற வேண்டும்.

    சென்னை:

    போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 'ஸ்டிரைக்' நடத்தப் போவதாக அறிவித்து உள்ளனர்.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் வருகிற 9-ந்தேதி முதல் நடைபெறும் என்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    ஆனால் அரசு தரப்பில் பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என்றும் இப்போதைக்கு அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறும் போது, "தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. பொங்கல் கழித்து பேச தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கேட்கப்படாத அகவிலைப்படியை தி.மு.க. ஆட்சியில் சேர்த்து வழங்க வேண்டும் என்று இப்போது 'டிமாண்ட்' வைக்கின்றனர். இது அரசியல் நோக்கமாகவே தெரிகிறது. பொங்கலுக்கு பிறகு பார்த்து செய்கிறோம் என்று சொன்னாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்த சூழலில் பொங்கல் பண்டிகைக்கான பஸ்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் நலன் கருதி அனைத்து பஸ்களையும் இயக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறி இருந்தார்.

    அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பஸ்களை தடையின்றி இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள் அனைத்து பொது மேலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

    நமது நிறுவனம் அத்தியாவசியப் பணி தொடர்புடைய நிறுவனமாகும். எனவே இப்போதைய சூழலில் எந்தவொரு நாளிலோ வேலைநிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

    இந்த நிலையில் பஸ்களின் செம்மையான மற்றும் சீரான இயக்கத்தினை உறுதிப்படுத்தும் பொருட்டு எந்தவொரு நாளிலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்தவிதமான விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு ஆஜராகி சீரான பஸ் இயக்கம் நடைபெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக மேற்குறிப்பிட்ட நாட்களில் பணிபுரிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அது மட்டுமின்றி ஒவ்வொரு பணிமனையிலும் தொழிலாளர்களின் வருகை பதிவு குறித்த விவரங்களை பொது மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

    வருகை பதிவு விவரங்களை அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் நகல் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் மூலம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகை வரை விடுமுறை எடுக்க முடியாது. விடுமுறை எடுப்பதற்கு பொது மேலாளரிடம் அனுமதி கேட்க வேண்டும்.

    இதையும் மீறி விடுப்பு எடுத்தாலோ அல்லது ஸ்டிரைக்கில் கலந்து கொண்டாலோ அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு விடும்.

    9-ந்தேதி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு பணிமனை முன்பும் பஸ்களை இயக்க தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு போக்குவரத்து கழகம் சார்பில் அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏற்பாடு செய்து வருகிறார்.

    பஸ் நிலையங்களிலும் 9-ந்தேதியன்று தேவையான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×