என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் குழுக்களுக்கு பயிற்சி
    X

    மகளிர் குழுக்களுக்கு பயிற்சி

    • சிறந்த பயிர் விளைச்சலுக்கு தரமான விதை மிக முக்கியமான காரணி ஆகும்.
    • விதை நேர்த்தி செய்தல் மற்றும் நுண்ணூட்ட கலவை இடுதல் போன்ற செயல் விளக்கங்கள் காண்பிக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுதானிய பயிரில் ராகி முக்கிய பயிர் ஆகும். சிறந்த பயிர் விளைச்சலுக்கு தரமான விதை மிக முக்கியமான காரணி ஆகும்.

    விதைச்சான்று மற்றம் அங்ககச்சான்று துறையின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 100 மெட்ரிக் டன் விதைகளுக்கு தரமான விதைகள் என்று சான்று வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி வட்டாரத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விதை உற்பத்தியாளர்கள் குழுக்கள் மகளிருக்கு அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு உறுப்பினர்களுக்கு ராகி பயிரில் தரமான விதை உற்பத்தி முறை மற்றும் விதைச்சான்று நடைமுறைகள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் பயிற்சி வழங்கினார்.

    பயிற்சியின் போது விதை பண்ணை அமைக்க அவசியமான அடிப்படை காரணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் நுண்ணுயிர் கலவைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல் மற்றும் நுண்ணூட்ட கலவை இடுதல் போன்ற செயல் விளக்கங்கள் காண்பிக்கப்பட்டன.

    பயிற்சியாளர்களுக்கு சிறு தானியங்கள் பயிர் செய்ய தேவையான தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை மகளிர் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபீஸ்ஜான் செய்திருந்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×