search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்டத்துக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலாபயணிகள் எடுத்து வர தடை
    X

    நீலகிரி மாவட்டத்துக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலாபயணிகள் எடுத்து வர தடை

    • பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
    • தடையை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு 2019-ம் ஆண்டு மே மாதம் வெளியான தீர்ப்பில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    அரசாணை நிலை எண் 84-ன்படி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 2018-ல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து அரசு மற்றும் தனியார் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும், கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.

    எனவே, அரசு மற்றும் சென்னை ஐகோர்ட்டின் அறிவுரைகளை முறையாக செயல்படுத்தும் பொருட்டு, நீலகிரி மாவட்டத்திற்குள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் கொண்டு வர வேண்டாம் எனவும், நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும், மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நிறுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி வரும்படி தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், தடையை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும் எனவும், தடையையும் மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை உடனடியாக மூடி முத்திரையிடப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

    மேற்கண்ட மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் முழுவதுமாக பின்பற்றி நீலகிரி மாவட்டத்தினை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் அருணா கூறியுள்ளார்.

    Next Story
    ×