search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடம்பூர் பேரூராட்சியில் தலைவர்-துணைத்தலைவர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல்
    X

    கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்று கொண்ட காட்சி.


    கடம்பூர் பேரூராட்சியில் தலைவர்-துணைத்தலைவர் பதவிக்கு நாளை மறைமுக தேர்தல்

    • கடம்பூர் பேரூராட்சி 1, 2 மற்றும் 11-வது வார்டுகளில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ராஜேஷ்வரி, சிவகுமார் ஆகியோரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
    • மொத்தம் உள்ள 12 வார்டில் தி.மு.க. 6 இடங்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு இடத்தையும், சுயேட்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றினர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி 12 வார்டுகளை கொண்டது.

    கடம்பூர் பேரூராட்சி

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

    கடம்பூர் பேரூராட்சி 1, 2 மற்றும் 11-வது வார்டுகளில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ராஜேஷ்வரி, சிவகுமார் ஆகியோரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. மற்ற 9 வார்டுகளிலும் போட்டி இருந்ததால் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் தேர்தல் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததால் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

    இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. அதில் ஏற்கனவே மனுதாக்கல் செய்த வேட்பாளர்களை கொண்டு தேர்தல் நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

    தேர்தல்

    அதன்படி 1, 2 மற்றும் 11-- வது வார்டுகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தவிர மற்ற 9 வார்டுகளுக்கும் கடந்த 29-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் கனகமணி (3-வது வார்டு) , தாளபுஷ்பம் (4), தமிழரசி (5), சரஸ்வதி (6), மாரீஸ்வரி (7), செல்லத்துரை (8), ஜெயராஜ் (9), ரெங்கசாமி (10), முத்துமாரி (12) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    மொத்தம் உள்ள 12 வார்டில் தி.மு.க. 6 இடங்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு இடத்தையும், சுயேட்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றினர்.

    பதவியேற்பு

    இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.

    மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அபுல்காசிம் வெற்றி பெற்ற 12 உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மறைமுக தேர்தல்

    நிகழ்ச்சியில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், கடம்பூர் நகர செயலாளர் பாலகுமார், அரசு வக்கீல் ராமச்சந்திரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஸ்வநாதராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் கடம்பூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் கடம்பூர் பேரூராட்சி அலுவலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.



    Next Story
    ×