search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகம் திரும்பி வர தொடங்கிய வடமாநில தொழிலாளர்கள்
    X

    சொந்த ஊருக்கு சென்று விட்டு ரெயில் மூலமாக மூட்டை முடிச்சுகளுடன் இன்று காலை கோவை வந்து சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள்

    அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகம் திரும்பி வர தொடங்கிய வடமாநில தொழிலாளர்கள்

    • தமிழகத்தின் டாலர் சிட்டியாக திருப்பூர் மாநகர் உள்ளது.
    • வடமாநில தொழிலாளர்கள் வருகையால், தமிழகத்தில் மீண்டும் வழக்கம் போல பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    கோவை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்கள், கிராமங்கள் என எல்லா பகுதிகளிலுமே வடமாநிலத்தவர்கள் அதிகமாக வேலை பார்த்து வருகின்றனர்.

    குறிப்பாக பீகார், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் தமிழகம் முழுவதும் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

    கட்டிட வேலை, மோட்டார் பம்ப் உற்பத்தி, நூற்பாலைகள், ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள், கயிறு ஆலைகள், கோழிப்பண்ணை கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் பணி, ஜவுளி உற்பத்தி என அனைத்து தொழில்களிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலை பார்த்து வருகின்றனர்.

    குறைந்த கூலி, அதிக நேர உழைப்பு என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும், வடமாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வடமாநில தொழிலாளர்களை தமிழக தொழிலாளர்கள் தாக்குவது போன்று சித்தரித்து போலி வீடியோக்களை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    இதனால் தமிழகத்தில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்களிடையே பதற்றம் நிலவியது. தமிழகம் முழுவதும் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பம் குடும்பமாக செல்ல தொடங்கினர்.

    இதனால் தொழில்கள் பாதிக்கும் நிலை உருவானது.

    இந்த வதந்தியை பரப்பியவர்களை கண்டுபிடிக்கவும், வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    தமிழகம் முழுவதும் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர்கள், போலீசார், தொழில்துறையினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு உரிய பாதுகாப்புகளும் வழங்கப்பட்டது.

    இதற்கிடையே இந்த விவகாரம் பீகார், ஜார்க்கண்ட் சட்டசபையில் எதிரொலித்தது. இருமாநில அரசும் ஒரு குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது. அந்த குழுவினர் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்தும் விசாரித்தனர். அப்போது வடமாநில தொழிலாளர்கள் தாங்கள் இங்கு நலமாக இருப்பதாகவும், எங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும், தமிழர்கள் தங்களிடம் குடும்பத்தில் ஒருவராக பாவித்து பழகுவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து தமிழக அரசு மற்றும் போலீசார் போலி வீடியோ பரப்பியவர்களை கண்டறிய தனிப்படை அமைத்தது. தனிப்படையினர் பீகார் மாநிலத்தில் முகாமிட்டு, தீவிர விசாரணை நடத்தி போலி வீடியோ பரப்பிய சிலரை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் நிலவி வந்த பதற்றமும் தணிந்தது. இதன் காரணமாக சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக தமிழகத்திற்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் சிறு குறு தொழிற்சாலைகளான மோட்டார் பம்ப் உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள், கிரைண்டர் தொழிற்சாலை, நூற்பாலைகள், ஓட்டல்கள் என பல்வேறு விதமான தொழில்கள் நடக்கிறது. இந்த பணிகளில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

    குறிப்பாக மூன்றரை லட்சம் வடமாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியால், இங்கு பணியாற்றிய ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

    தற்போது அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் நிலவி வந்த அச்சம் முழுவதும் விலகியதையடுத்து, கோவையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் கோவைக்கு வர தொடங்கி உள்ளனர்.

    கடந்த ஒருவார காலமாகவே ரெயில்கள், பஸ்கள் மூலமாக அவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சிலர் ரெயில்களில் கோவைக்கு நேரடியாக வருகின்றனர். ரெயில் கிடைக்காதவர்கள் சென்னை வந்து, அங்கிருந்து பஸ் மூலமாக கோவைக்கு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பிளாஸ்டிக் கம்பெனி, கெமிக்கல் கம்பெனிகள், கட்டுமான தொழில்களிலும், பெருந்துறை சிப்காட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    ஹோலி பண்டிகை மற்றும் தமிழகத்தில் பரவிய போலி வீடியோ காரணமாக இங்கு பணியாற்றி வந்த ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இந்த நிலையில் பண்டிகை முடிந்ததும், நேற்று மாலை முதல் வடமாநில தொழிலாளர்கள் ஈரோட்டிற்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர். இவர்கள் ரெயில்கள், பஸ்கள் மூலமாக வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் ஈரோட்டில் வழக்கம் போல் பணிகள் மீண்டும் மும்முரமாக நடந்து வருகிறது.

    தமிழகத்தின் டாலர் சிட்டியாக திருப்பூர் மாநகர் உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வேலை தேடி இங்குதான் வருகிறார்கள். வேலை தேடி வரும் அனைவருக்கும் இங்கு ஏதாவது ஒரு வேலை கிடைத்துவிடும். திருப்பூரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடும்பம் குடும்பமாக திருப்பூரில் இருந்து ஏராளமான வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

    தற்போது சொந்த ஊர் சென்றவர்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டும் திருப்பூர் நோக்கி வருகின்றனர். வரும் நாட்களில் இன்னும் பலர் வருவார்கள் என்பதால் வழக்கமான பணி தொடங்க ஒரு மாதமாகும் என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    கரூரில் கொசுவலை உற்பத்தி, வீட்டு உபயோக பொருட்கள், ஜவுளி, பஸ் பாடி கட்டு தொழில்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களில் 2 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு சென்றனர். மற்றவர்கள் இங்கேயே பணியாற்றினர். இந்த நிலையில் சொந்த ஊர் சென்றவர்களில் 1200 பேர் மீண்டும் கரூர் வந்து தங்களது பணியை தொடங்கி விட்டனர். குறைவான அளவிலேயே சொந்த ஊர் சென்றதால் கரூரில் தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை எனவும், வரும் நாட்களில் அனைவரும் வந்து விடுவார்கள் என்பதால் பணிகள் முழு வீச்சில் நடக்கும் என கொசுவலை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    வடமாநில தொழிலாளர்கள் வருகையால், தமிழகத்தில் மீண்டும் வழக்கம் போல பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×