search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர்- பட்டுக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு ரெயில் இயக்க திட்டம்
    X

    திருவாரூர்- பட்டுக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு ரெயில் இயக்க திட்டம்

    • செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் இருமார்க்கத்தில் வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் அங்கு 2 ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங் களுக்கு கூடுதலாக புதிய ரெயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் இருமார்க்கத்தில் வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு மார்க்கத்திலும் 3 நாட்கள் இந்த ரெயில் சேவை வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை ஆகிய 3 நாட்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வாரந்தோறும் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு வந்தடையும். இந்த ரெயிலுக்கான கால அட்டவணை தென்னக ரெயில்வே சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறும்போது, நாட்டின் அதிவேக ரெயில் சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் ரெயிலை கோவை-சென்னை இடையே இயக்குவதற்கு தென்னக ரெயில்வே பரிசீலித்து வருகிறது. திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரையிலான மீட்டர்கேஜ் பாதை அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் அங்கு 2 ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம் முதல் செங்கோட்டை வரை வாரம் 3 முறை இயக்கக்கூடிய ரெயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த 3 ரெயில் சேவைகளையும் அடுத்த மாதம் 8-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தென்னக ரெயில்வே துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றனர்.

    Next Story
    ×