search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பு பணி காரணமாக சிவன்மலை முருகன் கோவில் மலைப்பாதையில் செல்ல தடை
    X

    கோப்புபடம்.

    பராமரிப்பு பணி காரணமாக சிவன்மலை முருகன் கோவில் மலைப்பாதையில் செல்ல தடை

    • கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது.
    • வரும் 19-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் அனுமதி இல்லை.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் மலைக் கோவிலுக்கு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து 2 கி.மீ. தூரத்திற்கு இந்த மலைப்பாதையை புதுப்பிக்கும் பணியை சென்னையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, இதற்கான பூமி பூஜை சிவன்மலை முருகன் கோவில் அடிவா–ரத்–தில் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணிகள் சில நாட்கள் நடைபெற்றது. பின்னர் தை மாதத்தில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த சமயத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் சாலையை சீரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலைப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 19-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் படி வழியை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×