search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முழுவீச்சில் இயக்கத்தை தொடங்கிய  நிட்டிங் பொது பயன்பாட்டு மையம்
    X
    கோப்புபடம். 

    முழுவீச்சில் இயக்கத்தை தொடங்கிய நிட்டிங் பொது பயன்பாட்டு மையம்

    • பொது பயன்பாட்டு மையத்தில் அனைத்து மெஷின்கள் நிறுவும்பணி நிறைவடைந்துள்ளது.
    • நிட்டிங் நிறுவனங்களின் தேவையை பொருத்து துணி உற்பத்தியும் மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தியின் முதல் நிலையில் உள்ள நிட்டிங் துறையை பலப்படுத்துவதற்காக பல்லடம் அருகே நாரணாபுரத்தில் நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை நிறுவியுள்ளது, சிம்கா சங்கம். 40 நிட்டிங் நிறுவனங்கள் கரம்கோர்த்து 26 ஆயிரம் சதுர அடியில் நிட்டிங் மெஷின் கூடம், தொழிலாளர் திறன் பயிற்சி மையம், ஒர்க்ஷாப் , நூல் மற்றும் துணி ஆய்வக கட்டமைப்பு வசதிகளுடன் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 15.35 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 8.35 கோடி ரூபாய், மாநில அரசு 3 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளன. நிட்டிங் துறையினர் 4 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நிட்டிங் மெஷின்கள் படிப்படியாக இறக்குமதி செய்து பொது பயன்பாட்டு மையத்தில் நிறுவப்பட்டு வந்தது. கடந்தாண்டு திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.

    இறுதிகட்டமாக தற்போது சீன கிளவுஸ் நிட்டிங் மெஷின்கள் வந்துள்ளன. இதனால் பொது பயன்பாட்டு மையத்தில் அனைத்து மெஷின்கள் நிறுவும்பணி நிறைவடைந்துள்ளது.

    பொது பயன்பாட்டு மைய செயல்பாடுகள் குறித்து, 'சிம்கா' சங்க தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:-

    நிறுவப்பட்டுள்ள எந்திரங்களில் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமின்றி நிட்டிங் நிறுவனங்களின் தேவையை பொருத்து துணி உற்பத்தியும் மேற்கொள்ளப்படும். நவீன மெஷின்களால் திருப்பூரில் மதிப்பு கூட்டப்பட்ட பின்னல் துணி உற்பத்தி அதிகரிக்கும். பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும், புதுமையான பின்னலாடை ரகங்களை தயாரித்து உலகளாவிய சந்தை வாய்ப்புகளை வசப்படுத்த முடியும்.

    பொது பயன்பாட்டு மையத்தில் அமைக்கப்படும் பயிற்சி மையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நிட்டிங் மெஷின் ஆபரேட்டர், போர்மேன், டெக்னீஷியன் பயிற்சி அளிப்பதற்காக சிறப்பு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் நிட்டிங் தொழிலாளர்களுக்கான பயிற்சியும் துவக்கப்படும்.நூல் மற்றும் துணியின் தரம் மற்றும் குறைபாடுகளை கண்டறிவதற்கான சர்வதேச தரத்தில் பரிசோதிக்க ஆய்வகம், மெஷின்கள் பழுதுநீக்கும் ஒர்க் ஷாப் ஆகியன அடுத்தடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×