search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரியாணி அரிசிக்கான நெல் ரக விதைகள் - மானிய விலையில் விவசாயிகள் பெற்று பயன்பெற வேண்டுகோள்
    X

    கோப்புபடம். 

    பிரியாணி அரிசிக்கான நெல் ரக விதைகள் - மானிய விலையில் விவசாயிகள் பெற்று பயன்பெற வேண்டுகோள்

    • புதிய ரகமான விஜிடி 1 எனப்படும் வைகை டேம் 1 நெல் ரகமானது மிகுந்த சிறப்பு பெற்றது.
    • அரவைத் திறன் 66 சதவீதம் உள்ளதால் இந்த ரகம் நெல் விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் பிரதான பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 7000 ஏக்கர் பரப்பில் நெல் அரிசிக்காகவும், விதைக்காகவும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நீண்ட காலங்களாக ஒரு போகம் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த நெல் கடந்த 3 வருடங்களாக குறுவை மற்றும் சம்பா உள்பட 3 பருவங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக நெல்லில் குறுகிய கால ரகங்கள் மற்றும் நடுத்தர வயது, நீண்ட கால வயதுடைய ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. புதிய ரகமான விஜிடி 1 எனப்படும் வைகை டேம் 1 நெல் ரகமானது மிகுந்த சிறப்பு பெற்றது. ஏடிடி43 மற்றும் பிரியாணி அரிசி என அழைக்கப்படும் சீரக சம்பா ரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த நெல் ரகமானது 2019-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நெல் ஆராய்ச்சி நிலையம் (வைகை டேம்) ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

    சுமார் 130 நாட்கள் வயதுடைய இந்த ரகமானது சம்பா மற்றும் பின் சம்பா பருவத்திற்கு மிகவும் ஏற்ற ரகமாகும். மகசூல் சராசரியாக ஏக்கருக்கு 2,350 கிலோ வரை கிடைக்கிறது. இந்த மகசூல் சீரக சம்பா ரகத்தை விட 33 சதவீதம் அதிகமாகும். அரவைத் திறன் 66 சதவீதம் உள்ளதால் இந்த ரகம் நெல் விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ரகத்தின் அரிசி, பிரியாணி மற்றும் குஸ்கா செய்வதற்கு உகந்தது.

    அத்துடன் இந்த ரகமானது இலைச்சுருட்டுப் புழு, குலை நோய் மற்றும் செம்புள்ளி நோய் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. கடந்த குறுவை சாகுபடிக்காக சோழமாதேவி விவசாயிகள் மடத்துக்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த விஜிடி 1 எனப்படும் இந்த ரக விதைகளைக் கொண்டு சாகுபடி செய்தனர். அந்த விவசாயிகள் இது சீரக சம்பா ரகத்திற்கு மாற்றாக இருப்பதாக தங்களது திருப்தியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

    மடத்துக்குளம் வட்டாரம் பாப்பான்குளத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் விஜிடி1 ரக வல்லுனர் விதையைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆதார நிலை 1 விதைகள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த விதைகளைப்பெற்று பயன்பெறுமாறு மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×