search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல  நடவடிக்கை எடுக்க வேண்டும் -  நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    X

    பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    பல்லடம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் - நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    • மீனாட்சி அவென்யூ பகுதி மக்களுக்கு சப்பை தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.
    • குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின் வருமாறு:-

    பாலகிருஷ்ணன், (தி.மு.க.):- கல்லம்பாளையம் குட்டையில் பி.ஏ. பி. பாசன தண்ணீர் நிறைந்துள்ளது. அங்குள்ள மயானத்திற்கு செல்வதற்கு வழி இல்லை .எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜசேகரன், (தி.மு.க.):- குடியரசு தின விழாவில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு முறையாக இருக்கை வசதி செய்யப்படவில்லை.எனவே வரும் காலங்களில், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளித்து இருக்கை வசதி செய்யப்பட வேண்டும். பல்லடம் பஸ் நிலையம் முன்பு உள்ள சுகாதார வளாகம் அசுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதேபோல பல்லடம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராததால், பொதுமக்கள் ரோட்டில் நின்று பஸ் ஏறும் அவல நிலை உள்ளது. மேலும் பஸ்கள் உள்ளே வராததால் வியாபாரம் பாதிப்படைவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    நகராட்சி ஆணையாளர் விநாயகம் :- இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈஸ்வரமூர்த்தி,( காங்கிரஸ் ):-நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிப்பதை தனியாருக்கு விடும் திட்டத்தில், உள்ளூர் தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். வட மாநில தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது. கரையாம்புதூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. சரி செய்ய வேண்டும்.

    கனகுமணி துரைக்கண்ணன்,(அ.தி.மு.க.):- ராயர் பாளையம் பகுதியிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அபிராமி நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும்.மீனாட்சி அவென்யூ பகுதி மக்களுக்கு சப்பை தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.

    ஈஸ்வரி செல்வராஜ்,( பாஜக) :எனது வார்டு பகுதியில் சப்பை தண்ணீர் சரி வர வருவதில்லை. கடந்த ஆறு மாதமாக கேட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. குழாய்கள் தரம் இல்லாமல் அமைப்பதால் அடிக்கடி உடைந்து விடுகிறது.

    நகராட்சி பொறியாளர் ஜான் பிரபு:- குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தண்டபாணி,( சுயேச்சை): வடுகபாளையம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. சப்பை தண்ணீரும் முறையாக வருவதில்லை. ஏற்கனவே ஆழ்குழாய் கிணறு அமைக்க கோரிக்கை மனு அளித்திருந்தேன். மேலும் வரிவசூலில் வாட்டர் மேன்களை ஈடுபடுத்துவதால், குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க தாமதம் ஆகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சசிரேகா ரமேஷ் (பாஜக):- குடிநீர் பிரச்சினை தீவிரமாக உள்ளது. முன்பு மாதம் ஒருமுறை குழாய் உடைப்பு ஏற்படும். தற்போது மாதத்திற்கு 10 லிருந்து 12 முறை ஏற்படுகிறது. அதனை உடனடியாக சரி செய்வதற்கு பணியாளர்களும் வருவதில்லை. கேட்டால் வரி வசூலில் ஈடுபடுகிறோம் என்று சொல்கிறார்கள். குழாய் உடைப்பு பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொறியாளர் ஜான் பிரபு:- சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. விரைவில் சரி செய்யப்படும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட4வது வார்டு உறுப்பினர் சவுந்தரராஜன், எதுவும் பேசாமல் கூட்டத்தின் பாதியில் எழுந்து சென்றார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,நகராட்சி நிர்வாகத்தில், பலமுறை, பல கோரிக்கைகள் வைத்தும் எதுவும் நடக்கவில்லை. இந்த கூட்டத்தில் பேசி என்ன பயன் இருக்கப் போகிறது என கூறினார்.பின்னர் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை அமைந்துள்ள இடம், வண்டிப்பாதை,கிணறு, மயானம் என வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. எனவே,அதனை நில வகை மாற்றம் செய்து, பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் என மாற்றம் செய்ய வருவாய்த் துறையை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×