search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் பகுதியில் உரிமம் இல்லாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை
    X

    கோப்புபடம்.

    காங்கயம் பகுதியில் உரிமம் இல்லாத விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை

    • விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.
    • உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    காங்கயம்:

    காங்கயம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள், சோளம் விதைகள், காய்கறி விதைகளை விற்றால் விற்பனை செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரங்களில் விதை விற்பனை உரிமம் பெற்ற 34 அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், சூரிய காந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனைப் பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். அதில் விதை குவியல் எண், காலாவதி நாள், விற்பனை செய்த நாள், வாங்குபவா் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் உள்ளதா என சரி பாா்த்து வாங்க வேண்டும்.

    விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம். திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக்கூடாது. உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது விதைகள் சட்டம் 1966இன் படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

    Next Story
    ×