search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை ஒன்றிய 38 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க திட்டம்
    X

    கோப்புபடம். 

    உடுமலை ஒன்றிய 38 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க திட்டம்

    • ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
    • பணிகளை 15-வது நிதிக்குழு மானியத்தொகையில் (2022-2023) இருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த 38 ஊராட்சி பகுதிகளில் கடந்த மே மாதம் 31-ந் தேதி வரை வீட்டு வரி விதிக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மொத்தம் 64 ஆயிரத்து 183 வீடுகள் உள்ளன. இதில் 56 ஆயிரத்து 398 வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. மீதி 7 ஆயிரத்து 785 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை 15-வது நிதிக்குழு மானியத்தொகையில் (2022-2023) இருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3 அடுக்கு (மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி) 15-வது நிதிக்குழு மானியத்தில் மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.13 லட்சத்து 64 ஆயிரத்தில் 321 இணைப்புகளும், ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.76 லட்சத்து 8 ஆயிரத்தில் 1,471 இணைப்புகளும், கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரத்து 666-ல் 5,993 இணைப்புகளும் என மொத்தம் 7,785 வீட்டுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளது.

    இந்த வீட்டுக்குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்திற்கு 15-வது நிதிக்குழு மானியமாக ரூ.6 கோடியே 15 லட்சத்து 19 ஆயிரத்து 666 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி உத்தரவு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வந்ததும் பணிகளை தொடங்கி 2022-2023-ம் நிதி ஆண்டிற்குள் (2023 மார்ச் மாதத்திற்குள்) முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த திட்டத்தில் பணிகளை செய்வது குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தை உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டாரவளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) எம்.கந்தசாமி தலைமை தாங்கி நடத்தினார். அப்போது அவர் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    Next Story
    ×