search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு  பொதுத்தேர்வு - பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு
    X

    கோப்புபடம். 

    அரசு பொதுத்தேர்வு - பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

    • ஒருபுறம் தேர்வு மையம் அமைக்கும் பணிகளும், மறுபுறம் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளும் நடந்து வருகிறது.
    • சிரத்தை எடுத்து படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    மார்ச் 2-வது வாரத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பெரும்பாலான மாணவர்களை தேர்வுக்கு ஒரு மாதம் முன்பே மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தயார்படுத்தியுள்ளனர். ஒருபுறம் தேர்வு மையம் அமைக்கும் பணிகளும், மறுபுறம் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளும் நடந்து வருகிறது.

    நன்றாக படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற செய்வதற்கான பணிகள் நடந்து வந்தாலும், தேர்வெழுத தகுதியான மாணவர்களில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் சூழலுக்கு ஏற்ப சிறப்பு வகுப்புகளை காலை, மாலை நேரங்களில் நடத்திக் கொள்ள மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

    அவ்வகையில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாலை 5 மணி முதல் 7:30 மணி வரை சிறப்பு வகுப்பு பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு துவங்கப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வுகள் நடந்தாலும், பொதுத்தேர்வு தொடங்கும் வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், பொதுத்தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வருவதால், ஒவ்வொரு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளியிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு துவங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென தனி ஆசிரியர் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. சிரத்தை எடுத்து படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறுகையில், மாலை, இரவு நேர வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்து வழங்கி வருகிறோம்.

    மாணவர்கள் பள்ளியில் இருந்து சிறப்பு வகுப்புகளுக்கு வரும் நேரம், வீடு சென்றடையும் நேரம் பெற்றோருக்கு அறிவுறுத்தி விடுவதால் பெற்றோரும் இரவு வரையிலான வகுப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.100சதவீத தேர்ச்சியை பள்ளிகள் எட்டவேண்டும் என்பதை மனதில் கொண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

    Next Story
    ×