search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தொடர் மழையால் நிரம்பி வழியும் குளம்-குட்டைகள்:  வனப்பகுதி தடுப்பணைகளும் நிரம்பின
    X

    கோப்புபடம். 

    தொடர் மழையால் நிரம்பி வழியும் குளம்-குட்டைகள்: வனப்பகுதி தடுப்பணைகளும் நிரம்பின

    • ஆண்டு சராசரி மழையளவு வெறும், 600 மி.மீ.., மட்டுமே என்ற நிலையில் பருவமழை தான் பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது.
    • வனச்சரகங்களையொட்டி, மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவிநாசி:

    வட கிழக்குப்பருவ மழை கை கொடுப்பதால், அவிநாசி வட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன.குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்த அவிநாசி, மழைமறைவு பகுதியாகவே உள்ளது.

    ஆண்டு சராசரி மழையளவு வெறும், 600 மி.மீ.., மட்டுமே என்ற நிலையில் பருவமழை தான் பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் வட கிழக்குப்பருவ மழை கை கொடுக்க துவங்கியிருக்கிறது.

    அவிநாசி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன. குறிப்பாக 2 நாள் முன் 120 மி.மீ., மழை பெய்தது விசவாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    மழையால் அசநல்லிபாளையம் குளம், தாமரைக்குளம், கருவலூர் குளம் மற்றும் வெள்ளியம்பாளையத்தில் உள்ள நல்லாறு செக்டேம் ஆகியவை வேகமாக நிரம்புகின்றன. அதேபோல் பிற ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளும் மழைக்கு நிரம்ப துவங்கியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் இதே போன்று மழை பெய்யும் பட்சத்தில் குளம், குட்டைகள் நிரம்பி நீர் வளம் பெருகும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

    சில மாதங்களுக்கு முன் குளம் குட்டைகளில் இருந்து, விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் பல குளம், குட்டைகளில் இருந்து மண் எடுக்கப்பட்டது. வெட்டுக்குழிகள் ஏற்படாத வகையில் மேல் மண் மட்டுமே அள்ள வேண்டும்.

    அப்போது தான் குளம், குட்டைகள் அதன் தன்மையை இழக்காமல் இருக்கும் என்ற நிலையில் ஆழமாக அடிமண் வரை தோண்டி எடுக்கப்பட்டதால் பல இடங்களில் உள்ள குளம், குட்டைகளில் வெட்டுக்குழிகள் ஏற்பட்டு அதில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தப்பித்தவறி அதில் இறங்கினால் சேற்றில் சிக்கும் வாய்ப்புக்கூட உள்ளது.

    நீர் தேங்கியிருக்கும் குளம், குட்டைகள் அருகே, குழந்தைகள் சென்று விளையாடாத வகையிலான விழிப்புணர்வை, பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் தீயணைப்புத்துறையினர்.

    அவிநாசியில் கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின், முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த தல வரலாறு உடைய தாமரைக்குளம், மங்கலம் ரோட்டில் உள்ளது. ஏறத்தாழ, 103 ஏக்கர் பரப்பளவு உடைய தாமரைக்குளம், சுற்றுவட்டார கிராமங்களில் நஞ்சை விவசாய பூமிகளுக்கு பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கோவை மாவட்டம், அன்னூரில் துவங்கி கருவலூர், நம்பியாம்பாளையம், செம்பியநல்லூர் வழியாக பாய்ந்து வரும் மழை நீரோட்டமானது தாமரை குளத்திற்கு வந்தடைகிறது. அதன்பின் உபரிநீராக ராஜ வாய்க்கால் வழியாக வெளியேறி ராக்கியாபாளையம், திருமுருகன்பூண்டி வழியாக நல்லாற்றில் கலந்து நொய்யலில் சங்கமிக்கிறது.

    கடந்த 2 நாள் முன் பெய்த மழையால் தண்ணீர் அதிகரித்து வர துவங்கியது. சாலையப்பாளையத்தில் உள்ள குட்டை நிரம்பி மதகு வழியாக உபரி நீர் தாமரைக்குளத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடரும் நிலை உள்ளதால் பொதுப்பணித்துறையினர் தாமரைக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி தண்ணீர் பாய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவு உள்ளன. இந்த வனச்சரகங்களையொட்டி, மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக நீண்ட கால பயிரான மா, தென்னை மற்றும் மானாவாரி சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.வனத்தில் போதிய மழை இல்லாத போது, தண்ணீர் தேவைக்காக, வன எல்லையிலுள்ள விளைநிலங்களுக்கு விலங்குகள் இடம் பெயர்ந்து பயிர்களையும் சேதப்படுத்தும். இதனால் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவாகும்.

    வனத்திலுள்ள சிறு ஓடைகளில் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் வரத்து இருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறை சார்பில் இரு வனச்சரகங்களிலும், விலங்குகளின் குடிநீர் தேவைக்காக காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே 50க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதே போல் 40 குடிநீர் தொட்டிகளும் உள்ளன.

    இதில் இரு வனச்சரகங்களிலும் தலா 5 தொட்டிகளுக்கு, போர்வெல் மற்றும் சோலார் மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தண்ணீர் தேவைக்காக தாவர உண்ணிகள், மூணாறு ரோட்டை கடந்து அமராவதி அணைக்கு வந்து செல்லும்.இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனத்திலுள்ள தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வருகிறது.இதனால் விளைநிலங்களுக்கு வனவிலங்குகள் இடம் பெயர்வது வெகுவாக குறைந்துள்ளது. வனமும் பசுமைக்கு திரும்பி வருவதால் தாவர உண்ணிகள் அதிக தூரம் இடம் பெயராது என விவசாயிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.

    Next Story
    ×