search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறவைகள் சரணாலயமாக ஏழு குளம் மாற்றம் -  இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம். 

    பறவைகள் சரணாலயமாக ஏழு குளம் மாற்றம் - இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

    • பல வகையான மரங்கள், பறவைகள் கூடு கட்டவும், ஓய்வெடுக்கவும் வசதியாக உள்ளன.
    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, கல்வியல் சார்ந்த படிப்புகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்திமலையிலிருந்து வெளியேறும் தண்ணீரை சேமித்து வைத்து, விவசாயத்திற்கு பயன்படுத்த முற்காலத்தில் ஏழு குள பாசனம் ஏற்படுத்தப்பட்டது.வரிசையாக ஏழு குளங்கள் அமைந்திருக்கும் இப்பாசனத்திட்டத்தில் பெரியகுளத்தின் நீர்த்தேக்க பரப்பு 404 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

    இக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்திருப்பது, சீதோஷ்ண நிலை, அமைதியான சூழல், பறவைகளுக்குத்தேவையான மீன், புழுக்கள் உள்ளிட்ட உணவு கிடைப்பதால் பல்வேறு வகையான பறவையினங்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. குளத்தின் கரை மற்றும் நீர்த்தேக்க பரப்பில் வளர்ந்திருக்கும் பல வகையான மரங்கள், பறவைகள் கூடு கட்டவும், ஓய்வெடுக்கவும் வசதியாக உள்ளன.

    இதனால் ஆண்டுதோறும் ஏழு குளங்களுக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பல்வேறு வகையான உள்நாட்டு பறவைகள் வலசை போதல் நிகழ்வாக ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இப்பகுதியில் தங்கிச்செல்கின்றன. பெரியகுளத்தில், மஞ்சள்மூக்குநாரை, நீர்க்காகம், நத்தைகொத்தி, முக்குளிப்பான், கூழைக்கடா போன்ற பறவையினங்கள் வந்து கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.இவ்வாறு அரிய வகை பறவையினங்கள் தங்கினாலும், பல்வேறு இடையூறுகள் காரணமாக பறவைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    இடம் பெயர்ந்து வரும் பறவைகள் குறித்து தெரியாமல், அவற்றை விரட்டும் பணியிலும் பலர் ஈடுபடுகின்றனர்.இதனால் பறவைகளின் இயல்பான சுழற்சி வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகிறது. மேலும் பெரியகுளத்தில், பறவைகள் கூடு கட்டாத சில மரங்களும் அதிகரித்துள்ளன.இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக ஏழு குள பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:- உள்நாட்டில் இடம் பெயரும் தன்மையுள்ள பறவையினங்கள் ஏராளமாக இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. பறவைகள் இக்குளங்களில் கூடு கட்டி வசிக்கும் வகையில், அவை விரும்பும் மரங்களை குளக்கரையில் நடவு செய்யலாம்.இதனால், குளக்கரைகள் வலுப்படுவதுடன், மரங்களில் பறவைகள் நிரந்தரமாக தங்கும் வாய்ப்புள்ளது.பறவைகள் சரணாலயமாக மாற்றி மேம்படுத்தினால், இயற்கை மீதான ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, கல்வியல் சார்ந்த படிப்புகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.உடுமலை பகுதிகளில, பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில் பெரியகுளத்தை மேம்படுத்தி நடைபாதை, பூங்கா, படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை நிறைவேற்றினால் சுற்றுலா மையமாக மாறும்.எனவே பல்வேறு வகையான இயற்கை சூழல் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள ஏழு குள பகுதியை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்து வனத்துறை வாயிலாக பாதுகாக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×