search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் பஸ் நிலையத்தில்  அதிகரிக்கும் குற்ற சம்பவங்களால் பயணிகள் அச்சம்
    X

    வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 

    பல்லடம் பஸ் நிலையத்தில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்களால் பயணிகள் அச்சம்

    • தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • நிறைய பேர் வீண் அலைச்சல் என்று போலீசில் புகார் செய்வதில்லை.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பல்லடம் உள்ளது. விசைத்தறி, மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி காரணமாக, மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இணையான கட்டமைப்பு வசதிகள், அடிப்படை தேவைகள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை,திருச்சி, உடுமலை,பொள்ளாச்சி, மதுரை,போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து வருவதால் இங்கு அடிக்கடி குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்டவைகள் தினமும் நடைபெறுவதால், பல்லடம் பஸ் நிலையம் என்றாலே வெளியூர் பயணிகள் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று உடுமலையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் சத்தியமங்கலத்தில் இருந்து உடுமலை செல்வதற்காக பல்லடம் பஸ் நிலையம் வந்துள்ளார். உடுமலை பஸ் ஏறுவதற்கு முயன்ற போது இவரது சட்டை பையில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் திருடிவிட்டார். இவர் சட்டைபையை தொட்டுப் பார்த்தபோது செல்போன் இல்லை.

    இதைத்தொடர்ந்து படிக்கட்டில் நின்றிருந்த ஒருவர் வேகமாக பஸ்சை விட்டு இறங்கினார். உடனே இவரும் இறங்கி அவரைப் பிடித்து எனது செல்போனை கொடு என கேட்டபோது, அவர் நான் எடுக்கவில்லை எனக் கூறிவிட்டார். இதையடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம்-பக்கம் உள்ளவர்கள் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும், இது போன்ற செல்போன் திருட்டு, பணம் திருட்டு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. நிறைய பேர் வீண் அலைச்சல் என்று போலீசில் புகார் செய்வதில்லை. இதனால் திருடர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்எனஅவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×