search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை  நீட் தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில்  நடக்கிறது  - வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் விளக்கம்
    X

    கோப்புபடம். 

    நாளை நீட் தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடக்கிறது - வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் விளக்கம்

    • மதியம் 2மணி முதல் மாலை 5மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடக்க உள்ளது.
    • தேர்வை 4,000க்கும் அதிகமானோர் எழுத வர உள்ளனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் நாளை 7-ந்தேதி மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் கே.எம்.சி., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளி, திருப்பூர் ஜெயந்தி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, காங்கயம் ரோடு அபாகஸ் மாண்டிசோரி இன்டர்நேஷனல் பள்ளி, கூலிபாளையம் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி,அவிநாசி ஏ.கே.ஆர்., அகாடமி ஆகிய 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

    மதியம் 2மணி முதல் மாலை 5மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடக்க உள்ளது. காலை 11 மணிக்கு தேர்வு மையத்துக்கு தேர்வர் வந்து விட வேண்டும். அரைமணி நேரம் முன் தேர்வெழுதும் அறைக்கு வந்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு 4 மையங்களில் மட்டுமே தேர்வு நடந்த நிலையில் நடப்பாண்டு திருப்பூர் மாவட்டத்தில் தேர்வை எதிர்கொள்பவர்கள் அதிகம் என்பதால் கூடுதலாக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வை 4,000க்கும் அதிகமானோர் எழுத வர உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி., மேல்நிலைப்பள்ளி, உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 448 மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் வழங்கப்பட்டது.

    திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு பயிற்சியளிக்கப்பட்டது.இதில் 116 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் நீட் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், ஆசிரியர்கள் கிறிஸ்டோபர் (இயற்பியல்), மாணிக்கம் (வேதியியல்), பார்த்தசாரதி (தாவரவியல்), சுமித்ரா (விலங்கியல்) ஆகியோர் தேர்வை எதிர்கொள்வது, நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான விரிவான அறிவுரைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.

    அப்போது தேர்வில் வினாக்களை பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து அதன் பின் சரியான விடையை தேர்வு செய்து எழுத வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் கழிந்து விடும் என மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

    இது குறித்து நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    நீட் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பகுதியில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் இடம் பெறும். ஒவ்வொரு பாடத்திலும் ஏ மற்றும் பி என இரண்டு வகை இருக்கும். ஏ பிரிவில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

    பி பிரிவில் 15 வினாக்களில் ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளித்தால் போதும். ஐந்து வினாக்கள் சாய்ஸ்.ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பி பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.ஏனெனில் இப்பகுதியில் சிந்தித்து விடை எழுதும், சிந்தனையை தூண்டும், திறனறி வகை வினாக்கள் இடம் பெறும். மிகவும் கவனமாக இவ்வகை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

    மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 200 வினாக்களில் 180 வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் நான்கு மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்.தவறான விடைகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். எனவே வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து புரிந்து, அதன் பின் சரியான விடையை தேர்வு செய்து எழுதிட வேண்டும்.

    அதிக மதிப்பெண் பெற, உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முதலில் மிகவும் நன்கு பதில் தெரிந்த தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடையளித்தால் மட்டுமே 650 மதிப்பெண்களுக்கு மேலாக மதிப்பெண் பெற முடியும்.ஓ.எம்.ஆர்., சீட்டில் விடையை ஒருமுறை குறித்த பிறகு மாற்றம் செய்ய இயலாது. எனவே விடையளிப்பதில் அவசரம் கூடாது. முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×