search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலைமலர் செய்தி எதிரொலி - பல்லடம் நீரோடையில் மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
    X

    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    மாலைமலர் செய்தி எதிரொலி - பல்லடம் நீரோடையில் மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு

    • சமூக ஆர்வலர்கள் முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் அனுப்பியிருந்தனர்.
    • இந்த பகுதியில் ரேசன் கடை, தனியார் பள்ளி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நவீன மின்மயானம் அமைக்க கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் பச்சாபாளையம் நீரோடை பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2 மின்மயானம் அமைத்து மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் அனுப்பியிருந்தனர்

    இது குறித்து மாலைமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் பல்லடத்தில் நீரோடை சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவரிடம் நீரோடை உள்ள பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இடம் நீரோடை பகுதியாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் ரேசன் கடை, தனியார் பள்ளி உள்ளது. வாகனங்கள் செல்வதற்கு சரியான வழித்தடமும் இல்லை. ஏற்கனவே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும் ஏற்கனவே வெங்கிட்டாபுரம் பகுதியில், ரோட்டரி மின் மயான அறக்கட்டளை மூலம் சுமார் 4 கோடி ரூபாயில் நவீன மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்மயான திட்டம் செயல்பட்டு வருகின்ற வேளையில் புதிதாக இன்னொன்று அமைப்பது மக்கள் வரிப்பணம் வீணாக வழி வகுக்கும் என்று தெரிவித்தனர். அவர்களிடம் இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசுவதாக தெரிவித்த அவர் பின்னர் பல்லடம் நகராட்சி 8வது வார்டு பச்சாபாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அப்போது அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்குவது குறித்து அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார். தபால் அலுவலக வீதியில் உள்ள கூட்டுறவு சங்க கட்டடத்தில் செயல்பட்டு வரும் இ. சேவை மையத்தையும் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷ்,சமூக ஆர்வலர்கள் ராஜா,மல்லிகா,ராம்குமார், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×