search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன வெங்காயம் விலை உயர்வால்  விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    சின்ன வெங்காயம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • சின்ன வெங்காயம் வந்தால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
    • சின்ன வெங்காயம் உரிய விலைக்கு விற்பதால் விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமன்றி நல்ல தரமான சின்ன வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயத்துக்கு ஏற்ற தட்பவெப்பநிலை நல்ல விளைச்சலை கொடுத்து வருகிறது. ஆரம்ப காலங்களில் நாட்டு ரகங்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள் தற்போது உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    அனைத்து சமையலுக்கும் சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுவதால் எப்போதும் அதற்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. எனவே விவசாயிகள் ஆர்வமுடன் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    கடந்த காலங்களில் விலை குறைவாக இருந்த சின்ன வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ரூ.50 லிருந்து ரூ.80 வரை விலை கொடுத்து வாங்குகிறார்கள். நல்ல தரமான சின்ன வெங்காயம் கூடுதல் விலைக்கு வாங்கப்படுகிறது.

    மேலும் விலை குறைவான சமயங்களில் விவசாயிகள் பட்டறை அமைத்து இருப்பு வைத்து விலை ஏறுகிறபோது சின்ன வெங்காயத்தை விற்பனை செய்தும் வருகிறார்கள். பல்லடம் பகுதியில் தற்போது தான் நடவு பணிகள் தொடங்க உள்ளது.

    எனவே வெளி மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வந்தால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    எனவே மழை இல்லாமல் இருந்தால் அடுத்து வரக்கூடிய நாட்களில் ராசிபுரம், நாமக்கல் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு தயாரான நிலையில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அவ்வாறு வரும் பட்சத்தில் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் தற்போதைக்கு சின்ன வெங்காயம் உரிய விலைக்கு விற்பதால் விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×