search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொத்தமல்லி சாகுபடி தொழில்நுட்பங்கள் - தோட்டக்கலைத்துறை விளக்கம்
    X

    கோப்புபடம்.

    கொத்தமல்லி சாகுபடி தொழில்நுட்பங்கள் - தோட்டக்கலைத்துறை விளக்கம்

    • நோய் மேலாண்மை குறித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
    • கொத்தமல்லி இலைகள் 24 முதல் 36 மணி நேரத்திற்கு மேல் அழுகிவிடும்.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரத்தில் கொத்தமல்லி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் நோய் மேலாண்மை குறித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

    நறுமணப்பயிர்களில் கொத்தமல்லி விளைவிக்க ஏற்ற தட்ப வெப்ப நிலை, குடிமங்கலம் வட்டாரத்தில் நிலவுவதால் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.கொத்தமல்லி இலை, வாசனை எண்ணெய் எடுக்கவும், துவையல், சட்னி, சாலட், சூப், ஊறுகாய் தயாரிக்கவும், கொத்தமல்லி தண்டு, விதையும் பயன்படுகிறது.வேளாண் பல்கலைக்கழகம் வாயிலாக கோ - 5 முதல், கோ - 7 வரையிலான ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோ - 5 ரகமானது 35 நாட்களில் கொத்தமல்லி இலை உகந்ததாகவும், ஒரு ஹெக்டருக்கு 4.70 டன் மகசூல் கொடுக்கிறது. மேலும் இந்த ரகம் காரீப் மற்றும் ராபி பருவத்திற்கு ஏற்றதாகும்.கொத்தமல்லி ரகங்கள் கோடை பருவத்தில் இலைக்காகவும், உலர் மற்றும் அதிக வெப்பம் இல்லாத பருவத்தில் விதைக்காகவும் பயிரிடலாம்.பூ பூக்கும் பருவத்திலும் விதை முளைப்பதற்கும் அதிக பட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு ஹெக்டருக்கு இறவை சாகுபடிக்கு 10 - 12 கிலோ விதையும், மானாவாரி சாகுபடிக்கு 20 - 25 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

    நோயைக்கட்டுப்படுத்த டிரைகோடர்மா பூஞ்சானை கொல்லி, ஒரு கிலோவுக்கு 4 கிராம் வீதம் பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்ய வேண்டும்.பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டான் அல்லது டை மெத்தலேட் பயன்படுத்தினால் அசுவினி, மாவுப்பூச்சி, செதில் பூச்சி போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். சாம்பல் நோயை கட்டுப்படுத்த சல்பர் துகள், ஒரு கிலோ அல்லது 250 மில்லி டினோ கேப் என்ற பூஞ்சாண கொல்லியை பயன்படுத்தலாம்.கொத்தமல்லி விதைகள் 100 முதல் 150 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த இடை வெளி கிராமங்களுக்கு கிராமங்கள் வேறு பட்டு இருக்கும்.கொத்தமல்லி இலைகள் 24 முதல் 36 மணி நேரத்திற்கு மேல் அழுகிவிடும். விரைவில் அழுகும் தன்மை உடையதால், குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரத்திற்கு சேமிப்பை நீடிக்கலாம்.விதை சேமிப்பவர்கள் அறுவடை செய்த செடிகளை ஓரிரு நாட்கள் சூரிய ஒளியில் உலர வைத்து, ஈரப்பதம் 18 சதவீதம் வரும் வரை வைத்து விதைகளை பிரித்து 9 சதவீதம் ஈரப்பதம் வரும் வரை காய வைத்து, அதற்கு பின் சேமித்து வைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×