search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரமற்ற ஆடுகள் வழங்கப்படுவதாக புகார் - பழைய நடைமுறைப்படி வழங்க பயனாளிகள் வேண்டுகோள்
    X

    கோப்புபடம்.

    தரமற்ற ஆடுகள் வழங்கப்படுவதாக புகார் - பழைய நடைமுறைப்படி வழங்க பயனாளிகள் வேண்டுகோள்

    • ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும்.
    • ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் தயாராக இல்லை.

    திருப்பூர் :

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 ஆடுகள் வாங்க ஒரு ஆட்டுக்கு ரூ. 3,500 வீதம் 17 ஆயிரத்து 300 ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகளுக்கு ஆடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் அவிநாசி வடுகபாளையம், சின்னேரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு சமீபத்தில் ஆடுகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட ஆடுகள் தரமற்று இருப்பதாகவும், ஒரு ஆட்டின் விலை 1,000 முதல் 1,500 ரூபாய் வரை தான் தேறும் எனவும் பயனாளிகள் கூறினர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், ஒவ்வொரு வட்டார அளவிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்த வியாபாரிகள் மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது. மொத்த வியாபாரிகளால் கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியாக இல்லாவிட்டால், வேறு ஆடுகளை எடுத்து வரச்சொல்லி வாங்கிக் கொள்ளலாம். ஆடுகளை தேர்வு செய்வது பயனாளிகள் தான். பயனாளிகள் விருப்பப்பட்டால் சந்தைக்கு சென்றும் கூட ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றனர்.

    இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    அரசின் ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும். பயனாளிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட சந்தைக்கு சென்று, விரும்பிய ஆடுகளை வாங்கி கொள்ளலாம். அதற்கான தொகையை கால்நடை மருத்துவர்கள் விடுவித்து விடுவர்.தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு பொதுவாக ஒரு மொத்த வியாபாரி மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது.

    அவ்வாறு கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்ற புகாரும் வருகிறது.விவசாயிகளே நேரடியாக சந்தைக்கு சென்று ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறினாலும் அதற்கான தொகையை விடுவிப்பதில், துறை ரீதியாக நடைமுறை சிக்கல் உள்ளது.எனவே, பழைய நடைமுறைப்படி, அந்தந்த வட்டார கால்நடை மருத்துவர்கள் மூலம் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அவிநாசி, பல்லடம், திருப்பூர் உட்பட திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட 5 வட்டாரத்தில் தலா 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆடு வழங்கப்பட்டு வருகிறது.சில இடங்களில் ஆடுகள் அடுத்தடுத்து பலியாகின்றன. அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் கிராமத்தில் 3 ஆடுகள் பலியாகின.

    இது குறித்து பயனாளிகள் கூறுகையில்,

    அரசால் இலவசமாக வழங்கப்பட்ட ஆடுகள், சரிவர தீவனம் உட்கொள்ளாமல், சோர்ந்து போய் இருந்தன. சில ஆடுகள் இறந்தும் போயின. இறந்த ஆடுகளுக்கு பதிலாக, வேறு ஆடுகள் வழங்க ஏற்பாடு செய்வதாக கால்நடை பராமரிப்பு துறையினர் உறுதி அளித்துள்ளனர் என்றனர்.கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆடுகள் இறந்திருப்பதாக பயனாளிகள் தரப்பில் இருந்து புகார் பெறப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது:-

    அரசால் வழங்கப்பட்ட கால்நடைகளின் உண்மையான சந்தை மதிப்பை கால்நடை பராமரிப்பு துறையினரிடம் இருந்து பெற்று வரும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.ஆனால் எங்கிருந்தோ ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் தயாராக இல்லை. இதனால், அவை இறந்தால் இன்சூரன்ஸ் தொகையும் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×