search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நூலிழை ஆடைகளுக்கு அதிகரிக்கும் மவுசு
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்தி நூலிழை ஆடைகளுக்கு அதிகரிக்கும் மவுசு

    • 9 மாதங்களில் 53 ஆயிரத்து 586 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.
    • 6,325 கோடி ரூபாய் அளவுக்கு டீ-சர்ட் ஏற்றுமதி நடந்துள்ளது.

    திருப்பூர் :

    இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதத்துக்கும் அதிகம். குறிப்பாக பருத்தி நூலிழையில் தயாரான பின்னலாடைகள் உற்பத்தியில், திருப்பூர் முன்னிலை வகிக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற வளர்ந்த நாடுகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்திநூலிழை ஆடைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் திருப்பூரில் இருந்தே உற்பத்தி செய்து பெறப்படுகின்றன. நம் நாட்டின் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 53 ஆயிரத்து 586 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.திருப்பூரில் இருந்து மட்டும் 29 ஆயிரத்து 643 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் 3,383 கோடி ரூபாய்க்கு பின்னலாடைகள் ஏற்றுமதியாகியுள்ளன. திருப்பூரில் இருந்து நடந்த மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் டாப்- 10 ஆடை விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 6,325 கோடி ரூபாய் அளவுக்கு டீ-சர்ட் ஏற்றுமதி நடந்துள்ளது.

    பருத்தி நூலிழையில் தயாரித்த குழந்தைகளுக்கான பின்னலாடைகள் ரூ.2,998 கோடி , செயற்கை நூலிழை டீ-சர்ட் வகைகள் ரூ.1,866 கோடி, பருத்திநூலிழையில் தயாரித்த பைஜாமா மற்றும் இரவு ஆடைகள் ரூ.1,427 கோடி, இரவு நேர ஆடை மற்றும் பைஜாமா ரூ. 1,038 கோடி.

    பின்னலாடை சட்டை மற்றும் சில ஆடைகள் ரூ.821 கோடி, உல்லன் நூல் குழந்தைகள் பின்னலாடைகள் ரூ. 675 கோடி, பருத்தி நூலிழை டிராயர்கள், அரைக்கால் சட்டை ரூ. 619 கோடி. செயற்கை நூலிழை டிராயர் உள்ளிட்ட ஆடைகள் ரூ. 521 கோடி உட்பட 16 ஆயிரத்து 831 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் டாப் 10 ஏற்றுமதி ரகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இது குறித்து ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    திருப்பூரின் மொத்த ஏற்றுமதி 28 ஆயிரத்து 237 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது. இதில் டாப் 10 ஆடை ரகங்கள் மட்டும் 16 ஆயிரத்து 831 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது. திருப்பூரில் உற்பத்தியாகும் மிக தரம் வாய்ந்த டீ-சர்ட்டுகள், குழந்தைகள் ஆடைகள் மற்றும் இரவு நேர ஆடைகளையே அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டினர் பெரிதும் விரும்புகின்றனர். கோடை கால ஆர்டர்களுக்கு ஈடாக குளிர்கால ஆர்டர்களையும், செயற்கை நூலிழைகளை கொண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் ரவிசாம் மற்றும் இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (சிட்டி) தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட ஜவுளித் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:

    கடந்த 2007 பிப்ரவரி முதல் பருத்தி அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து நீக்கிய பிறகு, இந்திய ஜவுளித்தொழில் சவால்களை சந்தித்து வருகிறது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்.,) தளத்தில் நடைபெறும் முன்பேர பருத்தி வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், சுரேஷ் கோடக் என்பவர் தலைமையில் ஒரு ஜவுளி ஆலோசனைக் குழுவை அமைத்தது.

    இக்குழு இதுவரை 5 கூட்டங்களை நடத்தியுள்ளது. மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பருத்தி சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க தீவிரமாக முயற்சி எடுத்தார். இதன்விளைவாக பருத்தி ஆலோசனைக் குழுவானது முழு ஜவுளி மதிப்பு சங்கிலியை உள்ளடக்கி மறுசீரமைப்பு செய்துள்ளது.

    பருத்தி ஆலோசனைக் குழு மற்றும் செபியின் ஒப்புதலின்பேரில் எம்.சி.எக்ஸ்., கடந்த 13ந் தேதி புதிய ஒப்பந்தத்தை அறிமுகம் செய்தது. இந்த ஒப்பந்தம், ஆயத்த ஆடைகள் உட்பட முழு ஜவுளி மதிப்புச் சங்கிலியில் உள்ள விவசாயிகள், விசைத்தறியாளர்கள், வணிகர்கள், நூற்பாலைகள் மற்றும் இதர ஜவுளிப் பிரிவினருக்கும் பலன் அளிக்கும் வகையில் உள்ளது.

    நாட்டின் பருத்தி நுகர்வு 320 லட்சம் பேல்கள் வரையிலும், உற்பத்தி 360 லட்சம் பேல்கள் வரையிலும் உள்ளது. அதேசமயம் எம்.சி.எக்ஸ்., தளத்தில் பருத்தி வணிகம் 3 லட்சம் பேல்கள் என்ற அளவில்தான் உள்ளது. எம்.சி.எக்ஸ்.,ன் புதிய ஒப்பந்தம் அதிக பருத்தியை வர்த்தகத்துக்கு கொண்டு வரும். இது பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

    ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களும், எம்.சி.எக்ஸ்., தளத்தில் பருத்தியின் எதிர்கால வர்த்தகத்தில் பங்கு பெறுவது அவசியம். இதுதொடர்பாக ஜவுளித்துறை சார்ந்தவர்களுக்கு விழிப்புணர்வு பயிலரங்கு நடக்கிறது.

    இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

    சர்வதேச பருத்தி ஆலோசனை குழு அறிவிப்பின்படி சர்வதேச அளவில் பருத்தி நுகர்வின் அளவு 23 மில்லியன் டன்களாகும். அமெரிக்கா வேளாண் துறையின் அறிக்கையின்படி 2023-24 ம் ஆண்டில் உலக பருத்தி உற்பத்தி 24.9 மில்லியன் டன்களாக இருக்குமெனவும், இதில் சீனாவும்- இந்தியாவும் இணைந்து உற்பத்தியில் பாதிக்கு மேல் பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி காரணமாக இந்தியாவில் இறக்குமதி 10 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் குறைவாகும். இந்தியா பருத்தியை வங்கதேசம், சீனா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

    இந்திய பருத்தி கழகத்தின் தகவல்படி இந்தியாவில் பருத்தி உற்பத்தி 2020 -21ம் ஆண்டில் 352 லட்சம் பொதிகளிலிருந்து, 2021-22 ஆண்டு பருத்தி பருவத்தில், (அக்டோபர் - செப்டம்பர்) 315 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. தமிழகத்தில் பருத்தி முக்கியமாக மாசிப்பட்டம், ஆடிப்பட்டம், கார்த்திகைபட்டம் ஆகிய பருவங்களில் விதைக்கப்படுகிறது.

    தற்போது ஆடிப்பட்டம் முடியும் தருவாயில் மாசிப்பட்டம் விதைப்பு துவங்கியுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் 1.48 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 3.6 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் பரப்பில் 7. 5 சதவீதமும், உற்பத்தியில் 6 சதவீதமும் அதிகமாகும்.

    விவசாயிகள் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 26 ஆண்டுகளாக வேளாண் பல்கலை விலை முன்னறிவிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தியின் விலை மற்றும் சந்தை நிலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் படி, பருத்தியின் சராசரி பண்ணை விலை மார்ச் முதல் ஜூன் வரை குவிண்டாலுக்கு 7000 - 7500 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை படி விதைப்பு முடிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூரில் உற்பத்தியாகும்

    பருத்தி நூலிழை ஆடைகளுக்கு அதிகரிக்கும் மவுசு

    Next Story
    ×