search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக திருப்பூரில் தனிப்பிரிவு தொடக்கம்
    X

    தொழிலாளா் பாதுகாப்பு குறித்து தொழிற்ச்சாலை மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

    வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக திருப்பூரில் தனிப்பிரிவு தொடக்கம்

    • சிறிய சம்பவத்துக்கு காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு உள்ளது.

    திருப்பூர் :

    வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் இருந்து வெளியேற்றப்படுவதாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை ஆணையர் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளா்களின் மீது தாக்குதல் நடைபெறுவதாக வதந்திகள் பரவுவது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.

    இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறை, வருவாய்த் துறை ஆகியவை சாா்பில் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. இதில், கடந்த ஜனவரி மாதத்தில் நிகழ்ந்த சம்பவம் தற்போது இணையதளத்தில் பரவி வருவது தெரியவந்துள்ளது. அப்போது நடைபெற்ற சிறிய சம்பவத்துக்கு காவல் துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு உள்ளது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு மேலாளா்களுடன் ஆலோசனையும் நடத்தப்படும். திருப்பூா் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் வதந்தி பரவி வருவது தொழிலாளா்களின் உறவினா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்றாா்.

    வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் கூறியதாவது:- தற்போது சமூக வலைதளங்களில் 3 வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது. இதில் 2 வீடியோக்கள் வேறு மாநிலங்களில் நிகழ்ந்தவையாகும். இது திருப்பூரில் நிகழ்ந்ததுபோல ட்விட்டா் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்புவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில், வதந்தியாகப் பரவும் வீடியோக்களை வடமாநிலத் தொழிலாளா்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

    இந்த சந்திப்பின்போது திருப்பூா் மாநகர காவல் துணை ஆணையா் அபிஷேக்குப்தா உடனிருந்தாா்.

    புகாா் தெரிவிக்க தனி பிரிவு தொடக்கம்:

    திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்க ஏடிஎஸ்பி., தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் வடமாநிலத் தொழிலாளா்களின் பிரதிநிதிகளும் இருப்பாா்கள். இந்தப் பிரச்சினைகள் தொடா்பாக 94981-01320, 0421-2970017 ஆகிய எண்களில் வடமாநில தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×