search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் பலி
    X

    வெறிநாய்கள் கடித்து குதறியதில் இறந்து கிடக்கும் ஆடுகளை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்ட காட்சி. 

    காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் பலி

    • ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே செம்மங்காளிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவர் 15-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பழனிசாமி நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை பார்க்க வந்துள்ளார். அப்போது 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 4 ஆடுகள் செத்துவிட்டன. 6 ஆடுகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அவற்றை மீட்டு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு என்னவாக இருக்கும் என சந்தேகத்தில் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கயம் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் வெறிநாய்கள் கடித்தது போல் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.இதேபோல் ஊதியூர் பகுதியிலும் ஒரு விவசாயியின் பட்டியில் இருந்த ஒரு ஆட்டையும் மர்ம விலங்கு கடித்து கொன்று சிறிது தொலைவில் போட்டுவிட்டு சென்றுள்ளது. இதுகுறித்து காங்கயம் வனத்துறையினர் கூறும்போது " செம்மங்காளிப்பாளையம் மற்றும் ஊதியூர் பகுதியில் ஆடுகளை கடித்து குதறியது வெறிநாய்களாக இருக்க வாய்ப்புள்ளது. சிறுத்தையாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.சம்பந்தப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் வெறிநாய்கள் தவிர வேறு ஏதாவது மர்ம விலங்கு நடமாட்டம் தெரிகிறதா? என கண்காணிக்க உள்ளோம். இருப்பினும் பொதுமக்கள் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றார். செத்துப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடமான காங்கேயம் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் ஏ.சி. மணி சம்பவ இடத்தை பார்வையிட்டு விவசாயிக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.

    Next Story
    ×