என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
    X

    ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசிய போது எடுத்த படம். கலெக்டர் அமர்குஷ்வாஹா மற்றும் பலர் உள்ளனர்.

    புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

    • ரூ.109.71 கோடி மதிப்பில், 7 தளங்கள் கொண்ட கலெக்டர் அலுவலகம்
    • 21-ந் தேதி விழா நடக்கிறது.

    திருப்பத்துார்:

    ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு திருப்பத்துார் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவானது.

    இதனைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான அலுவலகங்கள் தனியார் கட்டடங்கள் மற்றும் அரசு கட்டடங்களில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 28க்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார்ந்த மாவட்ட அளவிலான அலுவலகங்கள் செயல்படும் வகையில் ரூ.109.71 கோடி மதிப்பில், 7 தளங்கள் கொண்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணி நடந்து வருகிறது.

    இந்த பணி விரைவில் முடிந்து வரும் 21ம் தேதி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்துார் மாவட்டத்திற்கு வருகிறார்.

    இது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நேற்று நடந்தது. சி.என். அண்ணாதுரை எம்பி, எம்எல்ஏக்கள் க. தேவராஜி (ஜோலார்பேட்டை), ஏ.நல்லதம்பி (திருப்பத்துார்), சி.வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

    திருப்பத்துார் மாவட்டத்தில் நடக்கும் முதல்வர் நிகழ்ச்சியில், வருவாய் துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பால்வளத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, வேலைவாய்ப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பழங்குடியினர் நலத்துறை, சுகாதாரத்துறை, நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம், தாட்கோ, மின்சாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    மேலும், கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.அரசு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக பணியாற்ற வேண்டும். அனைத்து துறை சார்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஆணைகளை தயாரிக்க வேண்டும். துறை சார்ந்த அலுவலர்கள் பேரூராட்சி., நகராட்சி ஊராட்சி ஒன்றிய, கிராமப்பகுதியில் உள்ள பயனாளிகளின் விவரங்களை தனித் தனியாக பட்டியலை தயார் செய்து கலெக்டரிடம் வழங்க வேண்டும்.

    விழா மேடை அருகில் திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள பெருமைகளை பறைசாற்றும் வகையில் கண்காட்சி அமைக்க வேண்டும். ஆம்பூர், வாணியம்பாடி, மற்றும் திருப்பத்துார் நுழைவு வாயிலில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். கலெக்டர் அலுவலகம் மற்றும் விழா நடைபெறும் இடத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்.

    குறிப்பிட்ட பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கப்பட்ட பின்பு அனைத்து பயனாளிகளுக்கும் அங்கேயே வழங்க வேண்டும்.எனவே அனைத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குநர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதனைத்தொடர்ந்து ரூ.109.71 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருப்பத்துார் கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் பிரதான நுழைவாயில் சாலைகள் போடுவது குறித்தும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புல்வெளி அமைத்தல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார், உடன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், ஜிஎம்எஸ். செந்தில்குமார், திட்ட இயக்குனர் எஸ் பி முத்து., உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×