search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்

    • திருப்பத்தூர் தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
    • வேலூரில் முப்பெரும் விழா நடக்கிறது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் கூட்ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட அவை தலைவர் ஆர்.எஸ். ஆனந்தன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க. தேவராஜி, எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை முன்னேற்ற வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மற்ற மாநிலங்கள் உற்றுநோக்கும் வகையிலும் பின்பற்றும் வகையிலும் திட்டங்கள் அமைந்துள்ளது.

    இதனால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இந்திய அளவில் 2-வது இடத்தை பெற்றுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    வேலூர் மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு மாவட்டங்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்து அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆவின் பால் தலைவர் எஸ். ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் என். கே. ஆர். சூரியகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, நகர செயலாளர் ம.அன்பழகன் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×