search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
    X

    வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்.

    வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

    • தங்குவதற்கு இட வசதி செய்து தர வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நூருல்லாபேட்டை மற்றும் கோவிந்தபுரம் பகுதியில் ஏரிகால்வாய், நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 48 வீடுகள், 1 அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை வருவாய்த்துறையினரால் கடந்த வாரம் இடிக்கப்பட்டது.

    வீடுகள் இழந்த பொதுமக்களுக்கு வருவாய் துறை சார்பில், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்று இடமோ அல்லது நேதாஜிநகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளோ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    வீடுகள் இழந்த பொதுமக்கள் அனைவரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை பள்ளியில் தூங்குவதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் பொது மக்களை பள்ளியிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

    இதனால் அப்பகுதியினர் சாலையோர பகுதிகள் மற்றும் மேம்பாலத்தின் கீழே தங்கி வரும் நிலையில் நேற்று மாலை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    ஒவ்வொரு வேலை உணவிற்கும், தங்குவதற்கு இடமில்லாத காரணத்தினால் கைக்குழந்தைகள், முதியவர்கள், இளம்பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை வைத்துக்கொண்டு மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாகவும், எனவே அதிகாரிகள் உரிய மாற்று இடம் வழங்க வேண்டும்,

    மாற்று இடம் வழங்கும் வரை தற்காலிகமாக தங்குவதற்கு ஏதேனும் இட வசதி செய்து தர வேண்டும் என்று கூறி 50-க்கும் மேற்பட்டோர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து, தகவலறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வட்டாட்சியர் சம்பத், டிஎஸ்பி (மாவட்ட குற்றப்பிரிவு) நிலவழகன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி தரும்படியும், அவ்வாறு பெறப்படும் கோரிக்கை மனுவின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×