என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சி.என், அண்ணாதுரை எம்.பி., தேவராஜி எம்.எல்.ஏ. பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் எம்.பி. எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
- அடிப்படை வசதிகள் இல்லை என புகார்
- ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையம் பல்வேறு மாநிலங்களை இணைக்கக்கூடிய முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது.
மேலும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காகவும் வியாபாரம் சம்பந்தமாகவும் பயணிகள் ரெயில் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை, கழிவறை, குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி, பயணிகளின் நட மேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாமல் பின் தங்கிய நிலையில் இருந்து வருகிறது.
இதுகுறித்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என ரெயில் பயணிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி., ஜோலார்பேட்டை தேவராஜி எம்.எல்.ஏ., ரெயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சி.என். அண்ணாதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. ரெயில் நிலையத்தில் நிழற்குடை குடிநீர் வசதி கழிவறை நடைமேடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரெயில் நிலையத்திற்கு தேவையான வசதிகள் குறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கும், ரெயில்வே வாரிய தலைவருக்கும் அறிக்கை சமர்ப்பிக்க ப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களில் அடிப்படை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது.
மேலும் ஆங்காங்கே ரெயில்வே தரைப் பாலங் களில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி பொது மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருவதால் இது குறித்த பணிகளும் நடவடிக்கைக்காக ரெயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பணிகளும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளனர் என தெரிவித்தார்.






