என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு பாராட்டு
- பள்ளியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், பெரியமோட்டூர் ஊராட்சி, பூனைக்குட்டிபள்ளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் உயர்நிலைப்பள்ளி தரமாக உயர்த்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில் பெங்களூர் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் பள்ளியின் அருகே உள்ள ஒரு ஏக்கர் சொந்த நிலத்தை உயர்நிலைப்பள்ளி கட்டிடம் அமைக்க இலவசமாக கொடுப்பதற்கு முன் வந்தார்.
இதனை அடுத்து பள்ளியின் 25-ம் ஆண்டு விழா மற்றும் பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். அமுதா தலைமை தாங்கினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அ. சுப்பிரமணி வரவேற்றார். பெரிய மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் என். கமலநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எம் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ் சத்யா சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் அமைக்க ஒரு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு இலவசமாக கொடுத்த வடிவேலை அனைவரும் பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்தனர்.
இறுதியில் பள்ளியின் ஆசிரியை ஜி. ஜெயலட்சுமி நன்றி கூறினார்.






