என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊதுபத்தி தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் காட்சி.
ஊதுபத்தி கம்பெனியில் வெடி பொருட்கள் வெடித்து சிதறியதா?
- போலீசார் தீவிர விசாரணை
- ரூ.10 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஊராட்சியில் ஊதுபத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இந்த தீவிபத்து ஏற்படும் முன்பு அந்த தொழிற்சாலை அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது.
அதன் பின்பு தொடர்ந்து தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளிலும் தீ பரவி எரிந்தது 4 மணி நேரம் தொடர்ந்து எரிந்தது. இந்த தீயை அணைப்பதற்கு திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டன.
தீயை அணைக்க பொதுமக்களுடன் இணைந்து போராடி 4 மணி நேரத்திற்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. அதற்குள் கம்பெனியிலிருந்த மிஷின்கள், மூலப் பொருட்கள் உள்ளிட்டவை அனைத்தும் எரிந்து சாம்பலானது.
இதன் மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் இருப்பதாக தெரிகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன், தாசில்தார் குமார், வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார்,வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த தீவிபத்தில் ஊழியர்கள் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியில் நள்ளிரவில் நடைபெற்ற தீ விபத்திற்கு காரணம் என்ன என போலீசாரும், வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊதுபத்தி தொழிற்சாலை இயங்கும் பகுதியில் ஒரே காம்பவுண்ட்டில் இரண்டு ஊதுபத்தி தொழிற்சாலைகளும், ஒரு அகர்பத்தி மற்றும் கொசுவத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இவற்றில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பணிக்கு யாரும் வரவில்லை, இருப்பினும் இரவு நேரத்தில் 35 பேர் பணிக்கு வர இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தொழிற்சாலைக்குள் இரவு 9.30 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால் கம்பெனியின் மேற்கூரைகள் சிதறி நான்கு புறமும் விழுந்துள்ளது. இந்த வெடி சத்தம் ஏறத்தாழ 2 கிலோமீட்டர் சுற்றளவு தூரத்திற்கு கட்டிடங்கள் அதிர்வுகளுடன் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் முறையாக அனுமதி பெற்று 3 தொழிற்சாலையில் ஒரே காம்பவுண்டில் இயங்கி வருகிறதா? வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






