search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1200 ஆண்டு பழமையான கோவில்கள் மண்ணில் புதைந்துள்ளது
    X

    1200 ஆண்டு பழமையான கோவில்கள் மண்ணில் புதைந்துள்ளது

    • முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பரபரப்பு பேச்சு
    • 200 சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி- ஜனதாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலக சிவனடியார்கள் திரு கூட்ட பொறுப்பாளர்கள் தலைமை தாங்கினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற சிலைகள் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு, சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.

    அவர் பேசுகையில், வேலூர் அருகே 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் பராமரிப்பின்றி காணாமல் போய் உள்ளது, சோழபுரம் (சோழவரம்) என்ற பகுதியில் சோழ மன்னன் கம்பு வர்மன் இறந்த இடத்தில் அவரது மகன் விஜய வர்மன் ஒரு சிவன் கோயில் எழுப்பியுள்ளார். அதற்கு அருகாமையில் ஒரு பெருமாள் கோவிலும் அதற்கு அருகாமையிலேயே ஒரு காளி கோவிலும் இருந்துள்ளது.

    அவை பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் நிலத்தில் மூழ்கி மூடப்பட்டுள்ளது. அதன் அருகாமையிலேயே ராஜராஜேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது.

    இதனை கட்டியது தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ தேவன் தான் கட்டியுள்ளார். முதலாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டுக்கள், முதலாம் ராஜேந்திர சோழ தேவரின் கல்வெட்டுக்கள் இவையெல்லாம் மண்ணில் புதைந்து உள்ளது. இந்த கோவில்கள் அங்கு இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு பாடடைந்துள்ளது.

    இதனை சிவனடியார்களாகிய நாம் முயற்சி செய்து தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று அடையாள சின்னங்களாக அறிவிக்க செய்ய வேண்டும்.

    கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கக்கூடிய எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை என கூறினார். தொடர்ந்து 200 சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிலைகளை பாதுகாப்பதற்காக அரசு 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சிலை பாதுகாப்பு அறைகளை கட்ட உத்தரவிட்டது, இந்த நிலையில் இதுவரையிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறைகள் கட்டப்படாமல் உள்ளது. ஒரே ஒரு கோவிலில் மட்டுமே சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது,

    அறலையத்துறை சார்பில் கோவில் சொத்துக்கள் ஆன்லைனில் பதிவேற்றி பாதுகாக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் அதன் தொன்மை தன்மையை அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்.

    மேலும் கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளில், மீட்கப்பட்டுள்ளவற்றை அருங்காட்சியகங்களில் வைக்காமல் மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களிலேயே கொண்டு வந்து வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.தாமோதரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×