search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாள் விழா:  `வாழ்க்கையின் பிரச்சினைகளை  நுட்பமான அறிவால் வெல்ல முடியும்- இஸ்ரோ தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி பேச்சு
    X

    விழாவில் கலந்து கொண்ட மாணவர்களை படத்தில் காணலாம்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாள் விழா: `வாழ்க்கையின் பிரச்சினைகளை நுட்பமான அறிவால் வெல்ல முடியும்'- இஸ்ரோ தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி பேச்சு

    • இஸ்ரோ தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
    • படைப்பாற்றல் மிக்க நபராக மாறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையில்லை என்று விஞ்ஞானி மந்திரமூர்த்தி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 58-வது கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது.

    இஸ்ரோ தலைமை விஞ்ஞானி

    கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    ஆமதாபாத் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) செயல்பாட்டு மைய தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    ஊக்கப்பரிசு

    டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும், 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கும், விருது பெற்ற பேராசிரியர்களுக்கும் ஊக்கப்பரிசுகளை வழங்கினார். பின்னர் தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி பேசியதாவது:-

    நான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் பிளஸ்-2 படிப்புக்கு பிறகு உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை இக்கல்லூரி எனக்கு வழங்கியது.

    நல்ல மாணவராக இருந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, சரியான பாதையை தேர்ந்தெடுத்து தேவையான உழைப்பை வழங்கியது எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது.

    வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக சிக்கலானது, சவால்கள் நிறைந்தது. அதேபோன்று வெற்றிக்கான வழிமுறையை தேர்ந்தெடுப்பதும் மிகவும் முக்கியம். நாம் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

    கடின உழைப்பு

    விஞ்ஞானியாகவோ அல்லது எந்த துறையிலும் ஒரு படைப்பாற்றல் மிக்க நபராக மாறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையில்லை. முறையான கல்வி, ஆழ்ந்த சிந்தனைத்திறன் உள்ளவர்கள் நிச்சயம் எந்த துறையிலும் சிறந்த வல்லுனராகலாம். மாணவர்கள் எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    நாம் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தாலும், எந்த சூழ்நிலையிலும் அது நம்மை பாதிக்கக்கூடாது. கடின உழைப்பையும், அறிவாற்றலையும் கொண்டு வெற்றி பெற வேண்டும். நம்மை பலவீனப்படுத்தும் நிகழ்வுகளை அறிவாற்றலால் முறியடியுங்கள். எந்த பின்பலமும் இல்லாத சூழ்நிலையில் இருந்து முன்னுக்கு வந்த நானும் இதற்கு சிறந்த உதாரணம்.

    நுணுக்கமான அறிவு

    மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் எந்த விஷயத்தையும் ஏற்று கொள்ளாதீர்கள். வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களை கற்றுக் கொண்டால், அது எப்போதும் கை கொடுக்கும். கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் கல்லூரி பருவத்திலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அனைத்து துறைகளிலும் நுணுக்கமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே இன்றைய தேவையாக இருக்கிறது. கல்வியின் பயன் அதிகம் இருந்தாலும், அறிவை மேம்படுத்துதலே முதன்மையானது. சவாலான வாழ்க்கையின் பிரச்சினைகளை நுட்பமான அறிவு கொண்டு வெல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆண்டு மலர் வெளியீடு

    விழாவில் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் ஆண்டு மலரை வெளியிட, அதனை விஞ்ஞானி மந்திரமூர்த்தி பெற்றுக்கொண்டார். கல்லூரி பொருளியல் துறை தலைவர் ரமேஷ் வாழ்த்தி பேசினார்.

    விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நூலகர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×