search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை கொள்ளை
    X

    வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை கொள்ளை

    • ரூ.1.50 லட்சம் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நேரு நகரை சேர்ந்தவர் தினேஷ் (33). இவரது மனைவி கலைவாணி. தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

    தினேஷ் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தினேஷ், தாய் நிர்மலா மற்றும் மனைவி, குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு மாடியில் படுத்து தூங்கினார்.

    பின்னர் இன்று காலை எழுந்து வீட்டின் உள்ளே செல்ல வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறை மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 55 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து தினேஷ் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செய்யாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தினேஷ் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் 3 பேர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருடும் காட்சி பதிவாகியிருந்தது.

    மேலும் கொள்ளையர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என கண்காணிப்பு கேமராக்களுக்கு செல்லும் வயர்களையும் அறுத்து வீசி உள்ளனர். இந்த பதிவுகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×