என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை
- ஒரே கயிற்றில் தொங்கிய பரிதாபம்
- போலீசார் விசாரணை
கலசபாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 70). இவரது மனைவி கஸ்தூரி (65) இவர்கள் உப்பு மற்றும் கோலமாவு வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 6 மாதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும் அதே கிராமத்தில் வசித்து வந்த மகன் மற்றும் மருமகள் அவ்வப்போது வீட்டிற்கு வந்து தேவையானதை வாங்கிக் கொடுத்து பார்த்து வந்துள்ளனர்.
இருப்பினும் கடந்த 3 நாட்களாக கதவை சாத்திக்கொண்டு யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் அவரது மருமகள் பூங்காவனம் வீட் டிற்கு சென்று உள்ளார்.
அப்போது ஒரே கயிற்றில் கதிர்வேலுவும் அவரது மனைவி கஸ்தூரியும் தூக்கில் தொங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்காவனம் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இறந்த நிலையில் கிடந்த இருவரையும் கீழே இறக்கினர்.
இச் சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணவன், மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே கயிற்றில் கணவன் மனைவி தூக்கு போட்டு இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






